முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் புகார்.. சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்ட நடிகை..!

0 16799

தாம் போலீசில் பாலியல் புகாரளிப்பதை தடுக்க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது வழக்கறிஞரிடம் சமரசம் பேசியதாக கூறி சிசிடிவி காட்சிகளை நடிகை வெளியிட்டுள்ளார். இதனிடையே நடிகையின் பாலியல் புகாரில் மணிகண்டனை வரும் 9ந் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகை அளித்த புகாரில் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், தன் மீதான பாலியல் புகார் குறித்து விளக்கமளித்த மணிகண்டன், புகார் கூறிய நடிகை யார் என்றே தனக்கு தெரியாது எனவும், தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கோடு புகார் கூறுவதாகவும், நடிகையின் வழக்கறிஞர் தன்னிடம் பணம் கேட்டதாகவும் மணிகண்டன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தான் சட்ட நடவடிக்கைக்கு செல்வதை தெரிந்து கொண்டு அதை தடுத்து நிறுத்துவதற்காக தனது வழக்கறிஞரிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சமாதானம் பேசியதாக நடிகை கூறியுள்ளார். கடந்த மாதம் 23-ந் தேதி முழு ஊரடங்கு தினமான ஞாயிற்று கிழமை அன்று, ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்து வழக்கறிஞரை மணிகண்டன் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ள நடிகை, அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, சிபிஐ அதிகாரி எனக்கூறிக் கொண்டு நபர் ஒருவர் தன்னிடம் இ-மெயில் கடவுச் சொல்லைக் கேட்டதாகவும், தனது வாட்ஸ் அப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்து மணிகண்டன் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள நடிகை, அது தொடர்பான ஆதாரங்களை போலீசில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ராமநாதபுரத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், 2நாட்களாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீடு பூட்டிக் கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வருகிற 9-ந் தேதிவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தன்னிடம் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கோடு நடிகை புகாரளித்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments