புளியங்குடியில் கனிமவளக் கொள்ளையில் பெரும் புள்ளி..! அதிரடி காட்டும் போலீஸ்

0 4182

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 3000 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் என்ற பெயரில் கனிம வளங்களை திருடி பெரிய அளவில் சட்டவிரோதமாக, சேம்பர் ஒன்று செயல்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், அந்த சேம்பருக்கு விவசாய நிலங்களில் இருந்து அனுமதியின்றி மண் திருடிச்சென்ற டிப்பர் லாரியை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கனிமவளக்கொள்ளை தொடர்பாக விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பச்சை பசேல் என்று இயற்கை எழில் சூழ்ந்த இந்த விவசாயபண்ணைக்குள், கனிமவளத்துறையின் முறையான அனுமதி இன்றி வண்டல் மண்ணை மலைபோல குவித்து வைத்திருக்கும் மாதா சேம்பர் ஒர்க்ஸ் இது தான்..!

புளியங்குடி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் தினேஷ்பாபு சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குளத்தை ஒட்டிய பகுதிகளில் பொக்லைன் மூலம் பெரிய அளவில் குழியை தோண்டி வண்டல் மண் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இரவு பகலாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திய நிலையில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்றை காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் மடக்கி பிடித்தார். அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் தனது உரிமையாளருக்கு, தான் சிக்கிக் கொண்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தார்

ஓட்டுனர் தகவல் தெரிவித்த சில நிமிடங்களில் அங்கு வந்தவர் , இயற்கை விவசாயம் செய்வதாக கூறிவரும் அந்தோணிசாமி என்பவரின் மகன் ஜேம்ஸ்..! அவர் தான் மாதா சேம்பரை நடத்தி வருவதாகவும் தனது ஓட்டுனரை விட்டுவிடும்படியும், பின்னர் கவனிப்பதாகவும் கூறிபேரம் பேசியுள்ளார்

பேரத்துக்கு பணியாத காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் , மண் எடுத்து செல்வதற்கு மாவட்ட கனிமவளத் துறையின் அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி அவரது டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததோடு, ஓட்டுனரையும் கைது செய்தார்.

அதனை தொடர்ந்து பெரிய கிணறு போன்று மண்ணை தோண்ட பயன்படுத்தப்பட்ட பொக்லைனை பறிமுதல் செய்ததோடு, அதன் ஓட்டுனரையும் கைது செய்தார்.

மேலும், மாதா சேம்பரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகப்பெரிய அளவில் வண்டல் மண் பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், அதுகுறித்தும் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில், மாவட்ட கனிமவளத்துறையின் விசாரணைக்கும் காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

சுமார் 3000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களை வளைத்துப்போட்டு இயற்கை விவசாயம் செய்துவருவதாக கூறப்படுவதால் மாவட்ட நிர்வாகம் விரிவான ஆய்வு நடத்தி கனிமவளக் கொள்ளையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இயற்கை வளங்களை வேட்டையாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments