நடிகையின் பாலியல் புகார் - முன்னாள் அமைச்சர் ஜாமின் மனு

0 5495

டிகை ஒருவர்  அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில் அவர் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் அளித்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் மணிகண்டன் தலைமறைவானார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் வழக்கு பதியும் போதும் குடும்பத்துடன் மதுரையில் இருந்துள்ளார். அதற்கு பிறகு அவரது குடும்பத்தினர் மட்டும் ராமநாதபுரம் திரும்பிய நிலையில், மணிகண்டன் எங்கு சென்றார் என தெரியவில்லை.

இந்த நிலையில், சென்னையில் இருந்து ராமநாதபுரம் விரைந்துள்ள தனிப்படை போலீசார் மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர். இராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் மணிகண்டன் அடிக்கடி சென்று தங்கியிருப்பார் என தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மணிகண்டன் குடும்பத்தினர், அவரது உதவியாளர்களிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதவியாளர்களிடம் செல்போன் மூலம் மணிகண்டன் அவ்வப்போது பேசியுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அவர்கள் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகையின் பாலியல் புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் பதிவான புகாரின் பேரில், ஆரம்பகட்ட விசாரணை இல்லாமல் தம் மீது அவசரம் அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தமது மனுவில் மணிகண்டன் கூறியுள்ளார். நடிகை தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை நடிகை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலில் ஒருவராக நடிகை செயல்பட்டு வருவதாகவும், மலேஷியாவில் இதுபோல பலரை அந்த நடிகை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மணிகண்டன் மனுவில் தெரிவித்துள்ளார்.

நடிகையை கருக்கலைப்பு செய்யும்படி தான் மிரட்டவில்லை என்றும், அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதை திருப்பி கேட்டது முதல் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்ய துவங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது முன் ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments