கைகொடுத்த மழை - மீண்டெழுந்த விவசாயிகள்...பாராட்டிய ஆட்சியர்..!

0 2679
கைகொடுத்த மழை - மீண்டெழுந்த விவசாயிகள்...பாராட்டிய ஆட்சியர்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையை கண்மாய்களில் சேமித்து வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி 2ஆம் போக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மகசூல் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட ஆட்சியரும் அவர்களை நேரில் சென்று பாராட்டினார். 

வானம் பார்த்த பூமி என்றும் வறட்சி மாவட்டம் என்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெயர்கள் உண்டு. வடகிழக்குப் பருவமழையை பிரதானமாக நம்பியிருக்கும் இந்த மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே இயல்புக்கு மீறிய வறட்சியை சந்தித்தது. விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகள், கிடைத்த தண்ணீரை வைத்து ஒரு போக சாகுபடியை மட்டும் மேற்கொண்டனர்.

இரண்டாம் போக சாகுபடியெல்லாம் சாத்தியமில்லை என எண்ணியிருந்த விவசாயிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழை பெரும் நம்பிக்கையை கொடுத்தது. வழக்கமாக ஜனவரியில் கிடைக்கும் 48.5 மில்லி மீட்டர் மழையளவைக் காட்டிலும் 248 மில்லி மீட்டர் மழை பதிவானது.

முக்கிய ஏரிகள், கண்மாய்கள், பண்ணைக்குட்டைகள், ஊரணிகள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட்டு இருந்ததால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அவற்றில் இந்த ஆண்டு தண்ணீர் முழுமையாக நிரம்பியது. குறிப்பாக மாவட்டத்தின் முக்கிய கண்மாய்களான ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய், களரி கண்மாய் என 3 கண்மாய்களிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் உற்சாகமடைந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வேளாண் துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு, இரண்டாம் போக சாகுபடிக்கு விவசாயிகளை தயார்படுத்தினார்.

உளுந்து, பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்களை சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2776 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன. முதுகுளத்தூர், கடலாடி, அச்சுந்தன்வயல் சிக்கல் என பயிரிட்ட அத்தனை கிராமங்களிலும் தற்போது அவை செழித்து வளர்ந்து நல்ல மகசூலையும் கொடுத்துள்ளன. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆம் போக சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்திருக்கிறது என உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ள விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சந்தித்து பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments