வாழ்க்கைப் பயணத்திற்கு துணையாகும் இசை.... இசைஞானிக்கு இன்று வயது 78..!

0 4775
வாழ்க்கைப் பயணத்திற்கு துணையாகும் இசை.... இசைஞானிக்கு இன்று வயது 78..!

இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 78 வயதாகிறது. அவருடைய இசை கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தை வசியப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த ராசய்யா என்ற இளையராஜா தனது சகோதரர்கள் பாவலர் வரதராஜன், கங்கை அமரன் உள்ளிட்டோருடன் கச்சேரிகள் நடத்தி வந்த நிலையில் பஞ்சு அருணாசலத்தின் கவனத்தைப்பெற்று 1976ம் ஆண்டு அன்னக்கிளி படத்தில் அறிமுகமானார். அப்போது ஏ.எம்.ராஜா என்ற இசையமைப்பாளர் இருந்ததால் தனது பெயரை இளையராஜா என்று மாற்றிக் கொண்டார். மச்சானைப் பார்த்தீங்களா பாடல் ஒலித்தபோது திரையரங்கில் எழுந்து ஆடாத ஆளே இல்லை என்று துள்ளியது அவருடைய இசை...

தொடர்ந்து ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா, பாக்யராஜ், ஆர்.சுந்தரராஜன்,மணிரத்னம் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களில் இசைஞானியின் பாடல்கள் உச்சம் பெற்றன.

சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராமராஜன் தொடங்கி இளம் நடிகர்கள் நடித்த முதல் படங்கள் வரை, திரைக்கதை கைவிட்ட தருணங்களில் இளையராஜாவின் இசையால் உயிர்பெற்ற படங்கள் ஏராளம்....

பல குரல்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இளையராஜா. ஆனாலும் டிஎம்எஸ் சுசிலா, எஸ்.பிபி, ஜேசுதாஸ் மலேசியா வாசுதேவன், மனோ , எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் போன்ற குரல்களுக்கு புதிய பரிமாணத்தை இளையாராஜாவின் இசை ஏற்படுத்தியது. அவரே சிறந்த பாடகராகவும் விளங்குகிறார்...

இசை தவிர ஆன்மீகம்,இலக்கியம் போன்றவற்றில் கவனம் கொண்ட இளையராஜா மறைந்த எம்.எஸ்.வி. மற்றும் கவியரசு கண்ணதாசன் மீது ஆழமான பக்தியும் மரியாதையும் கொண்டுள்ளார்.இதனை அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.கண்ணதாசனின் பல பாடல்களை அவருடைய கடைசி பாடலான கண்ணே கலமானே வரை இசையமைத்த இளையராஜா, மெல்லிசை மன்னருடன் இணைந்தும் சிலபடங்களுக்கு பாடல்களை இசைத்தார்.

காலங்கள் ஓடிவிடுகின்றன. காற்றில் எங்கும் இளையாராஜாவின் பாடல்கள் காலத்தை வென்று இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சாலையில் செல்லும் கார்களில் மட்டும் அல்ல வாழ்க்கையின் இடையறாத பயணத்திலும் எப்போதும் துணையாக ஒலிக்கிறது இசைஞானியின் தாலாட்டும் பூங்காற்றாக இருக்கும் இசை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments