ப்ரீபயரால் பற்றிக்கொண்ட விபரீத காதல்... போக்சோவில் சிக்கிய காதலன்.!

0 11557

சென்னையில் ஆன் லைன் வகுப்பிற்கு வாங்கிக் கொடுத்த செல்போனில் ப்ரீபயர் விளையாட்டில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு மாணவியிடம், காதல் வலை விரித்து கடத்திச்சென்ற மதுரை இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ப்ரீபயரில்  மிஸ்பயரானதால் கம்பி எண்ணும் காதலன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு 

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு ஆன் லைனில் படித்து வந்தார். கடந்த 27-ம் தேதி வீட்டின் படுக்கை அறையில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்தவர் காலையில் காணாமல் போனதால் பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த மாணவியை , இருசக்கரவாகனத்தில் வந்த இளைஞர் அழைத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியல் செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில் இருவரும் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரு சக்கர வாகன எண்ணை அனுப்பி கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், குமராட்சி சோதனைச்சாவடியில் மாணவியுடன் சென்ற இளைஞரை போலீசார் மடக்கினர். மாணவியை மீட்டதோடு அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று போலியாக இ பதிவு செய்து கடத்திச்சென்ற அந்த இளைஞரையும் பிடித்தனர்.

பின்னர், அவர்கள் இருவரையும் சென்னை திருமங்கலம் தனிப்படை போலீசார் நேரில் சென்று அழைத்து வந்தனர். சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் அவரது ப்ரீபயர் காதலன் என்பது தெரியவந்தது.

காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும், அவர், மதுரை அலங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ் என்பதும் ப்ரீ பைர் எனும் ஆன்லைன் விளையாட்டில் குழுவாக விளையாடும் போது இருவரும் சந்தித்து பழகியுள்ளனர். வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு குழுவாக சேர்ந்து விளையாடும் ப்ரீ பைர் விளையாட்டில் ஊரடங்கு நாளில் சேர்ந்து விளையாடி வந்ததில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. மாணவி 12-ம் வகுப்பு படிப்பதால் ஆன்லைன் வகுப்பு எனக் கூறி காதலன் சதீஷுடன் மிஸ்பயராகி பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேரில் பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டுவந்த சதீஷ் மாணவியை ஏமாற்றி கடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது. கடத்தப்பட்ட மாணவியிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதும் தெரியவந்ததால், ப்ரீ பயர் காதலன் சதீஷ் மீது போக்சோசட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளே, விருப்பப்பட்டு காதலனுடன் வீட்டை விட்டுச்சென்றாலும் , அழைத்துச்செல்லும் காதலன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படும் என சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பதின் பருவ சிறுமிகளிடம் அத்து மீறலில் ஈடுபட்டால் போக்சோ சட்டம் போனசாக கிடைக்கும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே தென்மாவட்டங்களில் சிறுவர்களுக்குள் சாதிய மோதலுக்கு வித்திட்ட ப்ரீபயர் விளையாட்டை தடை செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது ஆன் லைன் வகுப்பில் படிக்கின்ற பள்ளி சிறுமிகளை அடிமையாக்கி அவர்களது மனதை கெடுத்து வாழ்க்கையை திசைமாற்றும் ப்ரீ பயர் ஆன் லைன் விளையாட்டை அரசு தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments