சீரியல் படப்பிடிப்புகளுக்கு சேனல்கள் திடீர் அழுத்தம்.. தவிக்கும் தயாரிப்பாளர்கள்...! கொரோனா ஹாட்ஸ்பாட்டாகும் என அச்சம்

0 6162

மிழக அரசின் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்ஸி ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் தங்கள் தொழிலாளர்கள் படப்பிடிப்பு பணிகளுக்கு செல்ல தடை இல்லை என்றும் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதால், சில சேனல்கள் அனைத்து சீரியல் தயாரிப்பாளர்களையும் ஷூட்டிங்கிற்கு செல்ல அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியின் போது, சீரியல் படப்பிடிப்புக்குச்சென்று வந்த பெப்ஸியின் உறுப்பினரின் ஒருவரது குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து பலியாகி விட்டதாக வேதனை தெரிவித்தார்

ஒரு சீரியல் படப்பிடிப்பின் போது 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் , அதற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், அரசின் உத்தரவை மதித்து மே மாதம் 31ந்தேதி வரை சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க போவதில்லை என்றும் படப்பிடிப்புகளுக்கான அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெறுவதாகவும் ஆர்.கே செல்வமணி கூறியிருந்தார்.

முழு ஊரடங்கு 7ந்தேதிவரை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஆர்,கே செல்வமணி, திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஆடியோவில், ஊரடங்கு நேரத்தில் கூட சில தொலைக்காட்சிகள் சிறப்பு அனுமதிப்பெற்றதாக கூறி ஒரு சில சீரியல்களின் படப்பிடிப்புகளை தடையின்றி நடத்தி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் முழு ஊரடங்கு நீட்டிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.கே செல்வமணி, பெப்ஸி உறுப்பினர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்க தடையில்லை என்றும் அப்படி படப்பிடிப்புகளில் பங்கேற்கும் பெப்சி உறுப்பினர்கள் யாராவது கொரோனா பாதிப்புக்குள்ளானால் அதற்கான முழு பொறுப்பும் சீரியல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளை சார்ந்தது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து இதுவரை சேனல்கள், தாங்களே, முன்னின்று ஒன்றிரண்டு சீரியல்களின் படப்பிடிப்புகளை மறைமுகமாக நடத்திவந்த நிலையில் தற்போது அனைத்து சீரியல்களின் தயாரிப்பாளர்களையும் ஷூட்டிங்கிற்கு செல்லுமாறு சேனல் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பாத நிலையில் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்கினால், மீண்டும் பலருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது ? என்று தெரியாமல் சீரியல் தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments