இது அண்ணன் - தம்பி வில்லங்க சொத்து யாரும் வாங்க வேணாம்.. தரமான சம்பவம் செய்த தம்பி..!

0 32564

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும், குடும்ப வில்லங்க சொத்தை அண்ணன் விற்றுவிடக்கூடாது என்பதற்காக தம்பி ஒருவர் செய்த வினோதமான சுவர் விளம்பர சேட்டை உள்ளூர் மக்களை வியப்படைய வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் கிராமத்திற்குள் நுழைந்தால் போது, ஊர் பெயர் பலகை தொடங்கி மின்கம்பங்களில் இது அண்ணன் தம்பி வில்லங்க சொத்துக்குப் போகும் வழி... என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு நிற்கவில்லை குடி நீர் தொட்டி, பொதுக்கழிப்பிடம், குட்டிச்சுவர் , கட்டை சுவர் என ஒரு இடத்தையும் விடாமல், இது அண்ணம் தம்பி வில்லங்க சொத்து இந்த சொத்தை யாரும் வாங்க வேண்டாம் எனவும் ஊர் முழுக்க ஒரு சுவர் விடாம சும்மா வச்சு தீட்டு தீட்டுன்னு சுவர் விளம்பரம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சொத்து தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு இருக்கு, விரைவில் தீர்ப்பு என புது படத்தை ரிலீஸ் செய்ய போவது போல விளம்பரபடுத்தப்பட்டுள்ளது.

இது யார் பார்த்த வேலைன்னு விசாரித்தால், தவமணி என்பவருடைய இரு மகன்களிடையே உள்ள சொத்துபிரச்சனையை ஊரறிய விளம்பரப்படுத்தியது ஓவியரான அவரது இளையமகன் என்பது தெரியவந்தது.

தவமணியின் மூத்த மகன் பொன்னையா, இவருக்கும், இவரது தம்பியும் ஓவியருமான சௌந்தரராஜன் ஆகியோருக்கு இடையில் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் பொன்னையா பூர்வீக சொத்து ஒன்றை விற்க முயற்சி செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தம்பி சௌந்தரராஜன், தனது பூர்வீக சொத்தை எவரும் வாங்கக்கூடாது என்பதற்காக, இது போல வித்தியாசமான விளம்பர யுக்தியை கையிலெடுத்துள்ளார் ஓவியர் செளந்தரராஜன்.

இப்படி வினோத டயலாக்குடன் அரசு சுவர், தனியார் சுவர், ஊர் குடிநீர் தொட்டி, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அநேக இடங்களில் தனது எதிர்ப்பை தெரிவித்து தம்பி சௌந்தரராஜன் ஊர் முழுவதும் காமெடி டயலாக்குகளை எழுதி வைத்துள்ளார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த சுவர் விளம்பர டயலாக்குகளை வேடிக்கையாக பார்த்துச் செல்கின்றனர்.

குடும்ப சொத்தில் உள்ள வில்லங்கம் குறித்து , ஊரில் உள்ள ஒவ்வொருவராக பார்த்து சொல்வது கஷ்டமான காரியம் என்பதாலும், வெளியூர் காரர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால், உஷாராகி எச்சரிக்கை அறிவிப்பை மக்களுக்கு தெரிவிக்கவே இது போன்று எழுதி வைத்திருப்பதாக ஓவியர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சொத்தை விற்க முடியாமல் வில்லனாக நிற்கும் தம்பியை சமாளிக்க முடியாமல் பொன்னையா விழிபிதுங்கி போயுள்ளார்.

நாடே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி நேற்று இருந்தவர் இன்று இல்லை...! இன்று இருந்தவர் நாளை இல்லை ..! என்ற இக்கட்டான கால கட்டத்தில் தவித்துக் கொண்டிருக்க, ஏதோ இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து அனுபவிப்பது போல, சரிவிகித பங்கீட்டையும், விட்டுக் கொடுத்தலையும், உன்னதமான உறவையும் மறந்து சொத்துக்காக அடித்துக் கொள்ளும் சில உறவுகளும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments