தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் மக்கள்.. தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை..!

0 1723

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 113 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மதுரையில் மொத்தமாக 3லட்சத்து41ஆயிரத்து460 பேர் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியைக் போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் முகாமில், பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டோக்கன் முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வரிசையில் காத்திருக்கின்றனர். கிராமப்புறங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 31 தடுப்பூசி மையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு தலா 130 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

28 நாட்களுக்கு முன் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தற்போது வரை 5 லட்சத்து 18 ஆயிரத்துக்கு 167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 9 ஆயிரத்து 558 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 50 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் அதிகளவில் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தடுப்பூசி போட வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரையில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

திருச்சியில் தட்டுப்பாடு காரணமாக, பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை திருச்சி மாவட்டத்தில் ஆறரை லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முகாம்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரூரில் போதிய அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கரூரில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 500 டோஸ்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கஸ்தூரி பாய் தாய் சேய் நல மையத்தில் 250 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து2376 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தற்போது மாவட்டத்தில் 24ஆயிரத்து700டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில் 16 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, விறுவிறுப்பாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதைத் தவிர்த்து தனியார் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அவர்கள் பணியிடங்களுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments