லாக்கப்பிலிருந்து தப்பிய ரௌடிகள்... சினிமா பாணியில் ஒரு சம்பவம்..!

0 11809
லாக்கப்பிலிருந்து தப்பிய ரௌடிகள்... சினிமா பாணியில் ஒரு சம்பவம்..!

சென்னையில் காவல் நிலைய லாக்கப்பில் அடைக்கப்பட்டிருந்த ரௌடிகள் 3 பேர் சினிமா பாணியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல நாடகமாடி, போலீசாரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தத்ரூபமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல நாடகமாடி தப்பிச் செல்லும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். அதே பாணியில் சென்னை வியாசர்பாடியில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பல குற்றவழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஓராண்டு தடுப்பு காவலில் சிறையில் வைக்கலாம். அதன்படி, வழிப்பறி, கொலை முயற்சி என பல வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடியைச் சேர்ந்த கிட்டா என்கிற அஜித்குமார், அவனது கூட்டாளிகள் அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்த வியாசர்பாடி போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

லாக்கப்பில் அவர்கள் மூவரும் அடைக்கப்பட்டிருக்க, வெளியே அவர்களது உறவினர்களும் இருந்துள்ளனர். அப்போது அஜய் புத்தா, கிட்டா அஜித் இருவரும் லாக்கப் அறைக்குள்ளேயே சண்டையிட்டுள்ளனர். சண்டை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அருகில் இருந்த கண்ணாடி ஒன்றை உடைத்து இருவரும் தாக்கிக் கொள்ள முயன்றனர் என்று கூறப்படுகிறது. என்னமோ ஏதோ என்று பதறிய ரௌடிகளின் உறவினர்கள், உடனடியாக லாக்கப் கதவை திறந்துவிடுமாறு கூச்சலிட்டுள்ளனர்.

கண்ணாடியைக் கொண்டு தாக்கி விபரீதங்கள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணிய உதவி ஆய்வாளர் ஆனந்த் என்பவர், லாக்கப் கதவை திறந்து அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மூவரும் உதவி ஆய்வாளரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காவல்நிலையத்திலிருந்து தப்பிக்கவே இந்த தாக்குதல் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றி இருப்பது பின்னர்தான் தெரியவந்தது.

தப்பியோடிய ரவுடிகளில் கிட்டா அஜித் மீது கொடுங்கையூர், எம்.கே.பி நகர் , ஓட்டேரி , புளியந்தோப்பு காவல் நிலையங்களில் 24 வழக்குகளும், அஜய் குப்தா மீது 20 வழக்குகளும் , ஜெகதீஷ்வரன் மீது 20 வழக்குகளும் நிலுவையில் உள்ளதென போலீசார் தெரிவித்தனர். புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தப்பியோடிய ரௌடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments