கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு.!

0 3038

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்துகிறார். 

தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 692பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் முதலில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார்.

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், ஆய்வு செய்யவும் வரும்போது தன்னை வரவேற்க திமுக நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக நிர்வாகிகள் யாரும் தன்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும், கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு, ஒருவர்கூடப் பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே தனக்கு அளிக்கும் சிறப்பான வரவேற்பாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியருடனான கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் ஆயிரம் படுக்கைகள் அளவுக்கு காலியாக உள்ளதாகவும் பதற்றமான சூழல் இல்லை என்றும் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அப்போது, முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 10 ஆயிரம் பேருக்கு மளிகை  பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை ஸ்டாலின் வழங்கினார்.        

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments