நம்ம ஊர் சரளை கற்களுக்குள் வைரக்கற்களா? சந்திரமுகி கதையை நம்பி தேடுதல்

0 5513

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், ஆந்திராவில் கற்கள் சூழ்ந்த விவசாய நிலங்களில் கொட்டிக்கிடப்பதாக வெளியாகி உள்ள தகவலை அடுத்து கொழுத்தும் வெயிலில் கற்குவியலுக்குள் பல விவசாயிகள் வைரத்தை தேடி வருகின்றனர். வைரத்தை போலவே ஒன்றரை கோடி ரூபாய்க்கு வைரத்தை விற்றவரையும் வலை வீசி தேடி வரும் ஆந்திர போலீசாரின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன ஜொன்னகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரது விவசாய நிலத்தில் 30 காரட் வைரம் கிடைத்ததாகவும், அந்த வைரத்தை விவசாயி, உள்ளூர் வைர வியாபாரி ஒருவருக்கு 1கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், பரவும் தகவலை நம்பி உள்ளூர் வாசிகள், நம்ம ஊரில் வைரமா ?என்று சரளைக்கற்கள் நிறைந்த வயல்வெளியை இரைதேடும் கோழிகள் போல கிண்டி கிளற தொடங்கி இருக்கின்றனர் ..!

இந்த விவசாயிக்கு வைரம் கிடைத்த தகவல் சமூக வளைதளங்களிலும் வேகமாக பரவி வருவதால், கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பக்கீரப்பா தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் மக்கள் விலைமதிப்பற்ற வைர கற்களைக் கண்டுபிடித்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் வரை கர்னூல் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற வைர கற்கள் இந்த பகுதியில் கிடைப்பதாக பரவும் தகவலால், பலரும் ஆண்டுதோறும் இந்த பகுதிக்கு வந்து தேடுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பருவமழைக்கு பிந்தைய காலக்காட்டத்தில் பூமியின் மேல் அடுக்குகளை மழைநீர் அடித்துச் சென்ற பிறகு விலைமதிப்பற்ற வைர கற்கள் கிடைப்பதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். ஜொன்னகிரி, துக்கலி, மடிகேரா, பகிதிராய், பேராவளி, மகாநந்தி மற்றும் மகாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் மக்கள் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் வெளிவரும் என நம்பிக்கையோடு தேடுகின்றனர்..!

யாரோ ஒரு பெயர் தெரியாத நபர் வைரத்தைக் கண்டுபிடித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பரப்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், ஒரு விவசாயி ஒருவர் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்ததாகவும், 2020 ஆம் ஆண்டில், இரண்டு கிராமவாசிகள் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வைர கற்களைக் கண்டுபிடித்ததாகவும், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தை 50,000 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. சிலர் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் இந்த கிராமங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரத்தை தேடி வருகிறார்கள்.

இதில் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தகவல்களை நம்பி பல தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களும் அரசும் இப்பகுதியில் வைரங்களை கடந்த காலங்களில் தேடியுள்ளனர். இதற்கு அங்குள்ள கிராம மக்கள் சந்திரமுகி சினிமா பாணியிலான மூன்று விதமான வரலாற்று கதைகளை கூறுகின்றனர்.

அதன்படி அசோக பேரரசரின் காலத்திலிருந்து வைரங்கள் இப்பகுதியின் மண்ணில் இருந்தன என்று சிலர் கூறுகிறார்கள். கர்னூலுக்கு அருகிலுள்ள ஜொன்னகிரி மெளரியர்களின் தெற்கு தலைநகரான சுவர்ணகிரி என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கி.பி.1333 ஆம் ஆண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரும் அவரது மந்திரி திம்மருசுவும் வைரங்கள் மற்றும் தங்க ஆபரணங்களின் ஒரு பெரிய புதையலை அப்பகுதியில் புதைத்ததாகவும் அவைதான் மேலே வருவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு கதையின்படி கி.பி 1518 ஆம் ஆண்டு குட்டப் ஷாஹி வம்சம் என்று அழைக்கப்படும், கோல்கொண்டா சுல்தானேட் ஆட்சி காலத்தில் வைரங்கள் இப்பகுதியில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டதாக ஒரு கதை சொல்லப்படுகின்றது.

இங்கு உண்மையிலேயே வைரங்கள் கிடைக்கப்பெற்றாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை என்றும் சம்பந்தப்பட்டவர் வைரத்தை விற்றதகவல் வெளியானாலும் அவரை கிராமவாசிகள் காட்டிக் கொடுப்பதில்லை என்பதால் வைரத்தை போலவே அதனை எடுத்தவர்களையும் போலீசார் தேடிக் கொண்டே இருக்கும் பரிதாபம் தொடர்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments