கொரோனா பரவலை கட்டுப்படுத்த என்ன வழி..? கோவை - திருப்பூர் மக்கள் கவனத்திற்கு..!

0 5654

கோவை மற்றும் திருப்பூரில் அனுமதியின்றி இயக்கப்படும் பல்வேறு தொழிற்சாலைகளாலும், கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளாலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், வாகன சோதனையின் போது  மறிக்கும் போலீசாரிடம், கொரோனா சிகிச்சைக்கு அழைத்துச்செல்வதாக கூறி அச்சமூட்டுவதால் போலீசாரால் தடுக்க இயலாமல் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது

சென்னையில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக நாளுக்கு நாள் அதிகரிக்கப்படும் சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளை வகைப்படுத்தி அவர்களின் நோய் தீவிரத்திற்கு தக்கவாறு ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் காலி படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் 393 படுக்கைகளும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 207 ஆக்ஸிஜன் படுக்கைகளும், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவ கல்லூரியில் 10 படுக்கைகளும் காலியாக உள்ளது.

கோவை மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்க பெறாமல் நோயாளிகள் உறவினர்களுடன் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலைக்கழிக்கப்படும் நிலையை போக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இருந்தாலும் ஊரடங்கை மதிக்காமல் புற நகர் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து குறைந்தபாடில்லை.

அரசு மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகளின் உறவினர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சாலையில் வாகன சோதனையின் போது தடுத்து நிறுத்தப்படும் பெரும்பாலான நபர்கள், மருந்து வாங்க செல்வதாகவும், உறவினருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அழைத்துச்செல்வதாகவும் கூறுவதால் அவர்களை நெருங்கவே காவல்துறையினர் அஞ்சுகின்றனர்

இன்னும் சில இடங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் போலீசாருக்கு வழங்கபடாததால் கொரோனா என்றதுமே, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்துவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே வாகனத்தை மறித்து பறிமுதல் செய்ய முயன்றால் அரசியல் சிபாரிசு காரணமாக விடுவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனால் கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலாத நிலை நீடிக்கின்றது. தொடர்ந்து 3 வது நாளாக சென்னையை விட கோவையில் கொரோனா பாதிப்புகுள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல திருப்பூரில் வாகனத்தில் சுற்றுவோரை மறித்தால் பெரும்பாலானோர் கூறும் பதில் மாஸ்க் தயாரிக்கும் கம்பெனிக்கு செல்கிறேன், மெட்டீரியல் கொண்டு செல்கிறேன், என்ற காரணத்தை கூறிவிட்டு எளிதாக தாங்கள் வீடுகளில் இருந்த படியே தைத்து கொடுக்க வேண்டிய துணிகளையும், தையல் பொருட்களையும் மில்களில் இருந்து எளிதாக பெற்றுச்செல்வதால் போக்குவரத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்ப்பட்டுள்ளது

காவல்துறையினரும் கொரோனா பரவலை சுட்டிகாட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல அறிவுரைகளை வழங்கினாலும் திருப்பூரில் சுதந்திரமாக வலம் வருவோர் அதனை உணர்ந்ததாக தெரியவில்லை

கோவை வாசிகள் விழிப்புணர்வுடன் வீட்டுக்குள் அடங்கி இருந்தால் மட்டுமே அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வரும். அதே போல கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து சொந்த கிராமங்களுக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தவறியதால் தற்போது தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் மட்டும் அதிகபட்சமாக 239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மாப்பிள்ளையூரணியில் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது. மிக குறைந்த அளவே மக்கள் தொகை கொண்ட கூட்டுடன்காடு கிராமத்தில் 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து அனாவசியமாக வீதிக்கு செல்லாமல் வீட்டிலேயே தனித்திருந்தால் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments