ஞாயிற்றுக்கிழமை கோவை செல்கிறார் முதலமைச்சர்.. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேரில் ஆய்வு

0 2902
கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று கோவை செல்ல இருக்கிறார்.

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்கிறார். 

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 3ஆயிரத்து937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் தொற்று பாதிப்பில் தொடர்ந்து 3-ஆவது நாளாக சென்னையை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையிலும் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், கோவை அரசுக் கலைக்கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக வரும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தோடு சிலருக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட பேருந்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாகத் கோவையின் புறநகர்ப் பகுதிகளில் 15 மையங்களிலும், மாநகர் பகுதிகளில் 32 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதனிடையே கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார். இதற்காக, சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் கோவைக்குச் செல்கிறார். ஏற்கெனவே மே 20-ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன் கொடிசியா வளாகம் மற்றும் தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments