தமிழகத்தில் சில மாவட்டங்களில் குறைந்தும் சில மாவட்டங்களில் அதிகரித்தும் வரும் கொரோனா பாதிப்பு..

0 5856
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 268 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 873 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ள நிலையில் அவை அனைத்தும் நிரம்பியுள்ளன. அரசு கலைக்கல்லூரியில் 200 படுக்கைகளுடன் தயாராகி வரும் கொரோனா சிகிச்சை பிரிவை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் புதிதாக வரும் நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கு 966  ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளும் 144 சாதாரண படுக்கைகளும் உள்ள நிலையில், அவை அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் புதிதாக வரும் கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.  காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் காலியாக உள்ளன. இரண்டாவது நாளாக  35 படுக்கைகள் காலியாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரூர் மாவட்டத்தில் கொரனோ பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் காலியாகி வருகின்றன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 205 படுக்கைகள் காலியாக உள்ளன. இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 231 படுக்கைகளும்,  தனியார் மருத்துவமனைகளில் 38 படுக்கைகளும், கொரனோ சிகிச்சை மையங்களில் 446 படுக்கைகளும் காலியாக உள்ளன. 

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டதால் புதிதாக வரும் நோயாளிகள் மருத்துவமனை வாசலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1060 படுக்கைகளில் 667 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி கொடுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் புதிதாக வரும் நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் புதிதாக வரும் நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  220 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ள நிலையில், அனைத்தும் நிரம்பின. மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 முதல் 20  படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பொன்னேரி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக  50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments