நூதன ஆன்லைன் திருட்டு.. வாடிக்கையாளர் ஏமாந்த கதை..!

0 12867

போலியான குறுஞ்செய்தி மூலம் வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் ரூபாய் மோசடியாக திருடப்பட்டது. சென்னையில் நிகழ்ந்த நூதன ஆன்லைன் திருட்டு குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு..

சென்னை ONGC நிறுவனத்தின் ஓய்வு பெற்ற 66 வயது ஊழியரான அன்பரசு என்பவர், SBI வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, தமது பணி ஓய்வுத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் போட்டிருந்தார்.

ஒரே ஓரு OTP மூலம் இவரது வங்கி கணக்கில் இருந்து 53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நூதன முறையில் திருடப்பட்டது. 37 வருடங்களாக SBI வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்து வரும் வாடிக்கையாளர் அன்பரசு, இந்த நிகழ்வால்அதிர்ந்து போனார்.

இவரது டெபாசிட் தொகை கேன்சல் செய்யப்பட்டு, வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்ததாக வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில், 870925138 என்ற செல்போன் அழைப்பை உண்மை என நம்பி, அன்பரசு ஏமாந்து விட்டார்.

இவரது வங்கி கணக்கில் இருந்து, 10 லட்சம், 20 லட்சம், 23 லட்சம் என ஒரே நாளில் 3 முறை பணம் எடுக்கப்பட்டும் வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி வரவில்லை. இவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம், STDR என்ற தனி கணக்கிற்கு சென்றிருந்தது. STDR கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு பணத்தை மாற்ற குறைந்தது 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்பாகவே காவல்துறையில் புகார் கொடுத்ததால், வில்லிவாக்கம் அன்பரசுவின் பணம் நூலிழையில் தப்பியது.

சைபர் கிரைம் காவல்துறை ஒத்துழைப்பு அளித்ததால் வங்கியின் உதவியுடன் 16 மணி நேரத்திற்குள் 53 லட்சம் ரூபாய் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டது.எஞ்சிய 25 ஆயிரம் ரூபாயை மீட்க, உதவுவதாக வில்லிவாக்கம் SBI வங்கி உறுதி அளித்துள்ளது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, இதுபோன்ற ஏமாற்றுபவர்களும் வெவ்வேறு வடிவங்களில், மோசடி வலையை விரிப்பார்கள். எனவே, உஷாராகவும் கவனமாகவும் இருந்தால், தேவை இல்லாமல் ஏமாந்து, நிம்மதியை தொலைக்க வேண்டியதிருக்காது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments