தொடரும் கனமழை.. குமரியை புரட்டிப் போட்ட வெள்ளம்..!

0 3560
தொடரும் கனமழை.. குமரியை புரட்டிப் போட்ட வெள்ளம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர் புயல் மற்றும் வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையால் முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை தொடர்கிறது. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றிக்கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு கிராமங்களுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

தொடர் மழையால் முக்கடல் அணை ஒரே நாளில் பத்து அடி உயர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. திருப்பதிச்சாரம் அருகே கண்டமேட்டுகாலணியில் அருள் என்ற கூலி தொழிலாளி வீட்டின் மீது தென்னை மரம் விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர். மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யபட்டு உள்ளதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

தடிக்காரகோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாரையில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ரப்பர் தொழிற்சாலைக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. வடக்கு தாமரை குளம் - பறக்கை சாலை பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்த பாலத்தின் அடியில் ஆகாயத்தாமரைச் செடிகள் சிக்கிக் கொண்டன. உடனடியாக அவை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன.

நேற்று மாலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 43.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு நான்காயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு எட்டாயிரத்தி முன்னூறு கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 585 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments