கொரோனாவால் வசூல்ராஜாக்கள் கொள்ளையோ கொள்ளை... கட்டுப்படாத கலெக்சன் புலிகள்.!

0 4954

சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிகமான கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றது. ஏழை பணக்காரர் என பாரபட்சமின்றி தாக்கும் கொரோனா நேரத்திலும் கறாராக பணம் கறக்கும் வசூல் ராஜாக்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் நாள்தோறும் அதிக அளவில் மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், ஆக்சிஜன் படுக்கை வசதி வேண்டி தனியார் மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

அங்கு இவர்களுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளின் தரத்திற்கு ஏற்ப கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. தங்கள் மருத்துவமனையின் பெயரில் ரசீது கொடுத்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் மருத்துவமனையின் பெயரை குறிப்பிடாமல் மொட்ட கடுதாசி போன்ற ரசீதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு அறை கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. PPE kit என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இப்படி ஏதேதோ பெயர்களில் ரசீதுகள் எழுதப்பட்டு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் வரை கூட சில தனியார் வசூலிக்கப்படுகிறது.

இன்னும் சில தனியார் மருத்துவமனைகள், நோயாளியின் உறவினர்களிடம் , தாங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறி 10 நாட்கள் வரை சிகிச்சை அளத்து 8 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகின்றது.

இந்த கட்டணக் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் நீங்கள் முதலில் அந்த தனியார் மருத்துவமனை கேட்கும் முழு கட்டணத்தையும் செலுத்தி விடுங்கள் அதன் பின்னர் அந்த மருத்துவமனையின் பெயரில் ரசீது பெற்று எங்களிடம் சமர்ப்பித்தால் நாங்கள் மருத்துவமனையிடம் பேசி உங்கள் உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கி தருகிறோம் என்று கூறுகின்றனர்

தங்கள் விதியை நொந்தபடி பெரும்பாலானோர் சென்று விட ஒரு சிலர் மட்டுமே 104 உதவிமையத்தை தொடர்பு கொள்வதாக கூறப்படுகின்றது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் கிடைக்காத காரணத்தால் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று தனியார் மருத்துவமனைக்கு செல்வோரிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் கறந்து விடுகிறார்கள் இந்த வசூல் ராஜாக்கள்.

தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் உறவினர்களிடம் லட்சங்களை வசூலிக்கும் லட்சியத்துடன் செயல்படுவதால், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் உயிருக்கு பயந்து பல லட்சங்கள் கடனாவதுதான் தற்போதைய நிலைமையாக இருந்து வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்த பின்னர், ஒரு சில நல்ல மனம் படைத்தோரின் மருத்துவமனைகள் தவிர்த்து பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் இந்த நிலையே உள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏற்ப இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இந்த வசூல்ராஜாக்களின் கொட்டம் தொடர வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் கொரோனா பேரிடர்காலத்தில் பணம் உள்ளோரும் நல்ல மனம் உள்ளோரும் அரசின் நிவாரண நிதிக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்து உதவி வருகின்றனர். பள்ளிச்சிறுமிகள் தங்கள் சேமிப்புகளை கொடுக்க, சிலர் பசியாற்ற உணவு வழங்கி தங்களால் இயன்ற மனிதாபிமான உதவிகளை செய்துவரும் நிலையில் நோயாளிகளிடம் மனித நேயத்தை மறந்து நியாமற்ற அதிக கட்டணத்தை கறாராக கறப்பது சரியான அனுகுமுறையா ? என்பதை சம்பந்தப்பட்ட வசூல் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments