கரையைக் கடந்தது யாஸ் புயல்..! ஊருக்குள் கடல்நீர் புகுந்தது

0 3933
கரையைக் கடந்தது யாஸ் புயல்..! ஊருக்குள் கடல்நீர் புகுந்தது

ங்கக் கடலில் உருவான யாஸ் அதிதீவிரப் புயல் யாஸ் வடக்கு ஒடிசாவில் தாம்ரா - பாலாசூர் இடையே கரையைக் கடந்தது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ததுடன் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

வங்கக்டலில் உருவான அதிதீவிரப் புயல் யாஸ் வடக்கு ஒடிசாவில் பாலாசூருக்குத் தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் கரையைக் கடந்தது. கரையைக் கடந்தபோது மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கடல் அலைகள் வழக்கத்தைவிடக் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன.

ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் தாம்ரா என்னுமிடத்தில் புயல் கரையைக் கடந்தபோது மரங்களை ஆட்டிப் படைத்ததுடன் வீடுகள், கட்டடங்களின் கூரைகளையும் பிய்த்தெறிந்தது.

புயலின் எதிரொலியாகக் கடலோரப் பகுதிகளில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் மிதுனாப்பூர் மாவட்டத்தில் உள்ள திகாவில் அலைகள் சீற்றத்துடன் எழுந்ததால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.

புயலின் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்றும், ஜார்க்கண்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடந்தபோது ஒடிசாவின் தாம்ரா என்னுமிடத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் கடலோரப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன.

மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்படும் எனக் கணித்த பகுதிகளில் மீட்புப் பணிக்குத் தயாராக ராணுவத்தின் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. புயல் கரையைக் கடந்த நேரத்தில் திகாவில் பலத்த மழை பெய்ததுடன் கடல்சீற்றத்துடன் காணப்பட்டது. கடல்நீர் ஊருக்குள் புகுந்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் 32 பேரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

யாஸ் புயல் கரையைக் கடந்தபோது பலத்த சூறைக்காற்று வீசியதாலும் அலைகள் சீற்றத்துடன் எழுந்ததாலும் பாராதீப் மீன்பிடி துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் சேதமடைந்தன. இருபதுக்கு மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கின. புயல் பாதித்த பகுதிகளில் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பத்ராக் மாவட்டம் ஜாமுஜாதி என்னுமிடத்தில் வெள்ளப்பெருக்கால் சாலை சேதமடைந்த நிலையில், பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு சாலையின் குறுக்கே வாய்க்கால் தோண்டி வெள்ளம் வடிய வசதி செய்யப்பட்டது.

ஒடிசாவில் மேற்கு வங்க எல்லை அருகில் உள்ள உதய்ப்பூரில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், கரையோரத்தில் உள்ள கடைகளும் புயலால் சேதமடைந்தன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments