அரசு மருத்துவ காப்பீடா செல்லாது செல்லாது...! முரண்டு பிடிக்கும் ஆஸ்பத்திரி

0 4467
அரசு மருத்துவ காப்பீடா செல்லாது செல்லாது...! முரண்டு பிடிக்கும் ஆஸ்பத்திரி

ஈரோடு அருகே, கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுத்த தனியார் மருத்துவமனை ஒன்று, மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால், அரசின் உத்தரவை மதித்து கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைத்தது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைக்காக மணிக்கணக்கில் காத்திருந்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதால், மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். ஆனால் வழக்கம் போல சில தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு வரைமுறை வழங்கியது மட்டும் இன்றி கொரோனோ தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் செலவுகளை தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கும் என்றும் அறிவித்தது. இதனை பல தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தற்போது வரை ஏற்று கொள்ளாமல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியைச் சேர்ந்த பிரபு, கடந்த 11 நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி பாக்கிய லட்சுமி தனது கணவரை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க முயன்றுள்ளார். அங்கு ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால், தனது கணவரின் உயிரை காப்பற்ற வேண்டி ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள கல்யாணி கிட்னி கேர் என்ற தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கொரோனோவுக்காக சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இந்த மருத்துவமனையும் உள்ளது. தனது கணவருக்கு செவ்வாய்க்கிழமை வரை 75,000 ரூபாய் வரை கொரோனோ சிகிச்சைக்காக கட்டியுள்ளார். மொத்தம் 11 நாட்கள் ஆகிய நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது பிரபுவின் மனைவி பாக்கியலட்சுமி தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள கூறி உள்ளார்.இதனை அந்த மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியதை நம்பி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் தனியார் மருத்துவமனை கேட்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்பதால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தனக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உடனடியாக அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனை நிர்வாகம் காப்பீட்டு திட்டத்தில் கட்டணத்தை ஏற்றுக் கொள்வதாக கூறியது.

இதே போல ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர் கடந்த 22 ம் தேதி அன்று சிறுநீரகப் பிரச்சனை சம்பந்தமாக இதே மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். கொரோனா தொற்று இல்லாத நிலையிலும் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையில் இருந்த சிவானந்தம் திங்கள்கிழமை இரவு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த கூறியுள்ளது. இதனை கட்டினால் மட்டுமே அவரின் உடலை தர முடியும் என்று கூறி உள்ளது.

உயிரிழந்த சிவானந்தத்தின் உறவினர்கள் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர்.ஆனால் அதனை தனியார் மருத்துவமனை மறுத்ததால் அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து சிவானந்தத்தின் உடலை பெற்றுச்சென்றுள்ளனர்.

தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தினை கொரோனோ நோயாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு ஒருபுறம் கூறினாலும் அதனை ஏற்க தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன.தமிழக அரசு அறிவித்த பிறகும் அதனை ஏற்க மறுத்து வரும் தனியார் மருத்து மனைகள் மீது மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவமனைக்குச் செல்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments