தளர்வுகளற்ற ஊரடங்கில் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் உத்தரவு

0 1938

தமிழகம் முழுவதும் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகத்தை உறுதிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவாசியப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நகரப்பகுதிகளை போல கிராமப்பகுதிகளிலும் காய்கறி விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் காய்கறிகள் பழங்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும், கிராமங்களில் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் சென்னையில் மட்டும் 1,670 வாகனங்களில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிற மாவட்டங்களில் மட்டும் 4,626 மெட்ரிக் டன் காய்கறிகள் 6,296 வாகனங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

விவசாயிகளின் விளைப்பொருட்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேளாண்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக கொள்முதல் செய்து தேவைப்படக்கூடிய இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை விநியோகிக்கப்பட்டுவருவதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் 23,900 ஹெக்டேர் பரப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கப்பட்டு வருவதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments