'ஜாலிக்காக செய்தேன், விபரீதத்தில் முடிந்து விட்டது'- விடிய விடிய நடந்த விசாரணையில் கதறிய ராஜகோபால்!

0 24922
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன்

சும்மா ஜாலிக்காக மாணவிகளிடம் பேசியதாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபால் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

சென்னை கே.கே.நகரில் இயங்கும் பத்மா சேஷாத்ரி பள்ளி 12-ம் வகுப்பு ஆசிரியர் ராஜகோபால், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அந்த பள்ளியில் 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த தகவல் வெளியானதை பார்த்ததும் தான் புகார் அளிக்க முன் வந்ததாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் ராஜகோபால் மீது அப்போது பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை எனவும், ராஜகோபாலனின் பாலியல் தொந்தரவால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் புகாரளித்துள்ளார்.

அதே வேளையில், ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் சைபர் க்ரைம் போலீசார் மூலம் மீட்டுள்ளனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், ராஜகோபாலிடம் இது குறித்து விசாரித்த போது ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதையும் தான் ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார். நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் ஏன் ராஜகோபால் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜகோபாலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் மேலும் சில ஆசிரியர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments