தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

0 1070

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின், 2-வது நாளான இன்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

கரூரில் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பொது இடங்களில் அநாவசியமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. இதனால், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் 2-ம் நாளான இன்று விழுப்புரத்தில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோரை மட்டும் அனுமதித்த போலீசார், மற்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளான, மூங்கில் மண்டபம், பூக்கடைச் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பணிக்குச் செல்வோரும் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 இடங்களில் சோதனை சாவடி அமைத்து 1400 காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிந்த 2290 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத, முகக்கவசம் அணியாத 2,554 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேனியில் முகக்கவசம் அணியாமல் வந்த காவலருக்கு, 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மாவட்ட எஸ்.பி., அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.  அரண்மனைப்புதுர் பகுதியில் வாகன சோதனையை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments