தமிழகம் முழுவதும் வீடு தேடி செல்லும் காய்கறிகள்..!

0 3692

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளிலேயே குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. 

சென்னையின் 15 மண்டலங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. காலை 6 மணிக்கு தொடங்கி, 12 மணி வரை காய்கறி விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே காய்கறி விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ 15 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் கிலோ 26 ரூபாய்க்கும், கத்திரிக்காய் கிலோ 22 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

திருச்சியில் காய்கறிகள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களின் இயக்கத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு தொடங்கி வைத்தார். தக்காளி, கத்திரிக்காய் கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 30 ரூபாய்க்கும், வெங்காயம் 30 ரூபாய்க்கும், கேரட், பீன்ஸ் கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

திருவள்ளூரில் நடமாடும் காய்கறி விற்பனை மையங்களை எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். தக்காளி கிலோ 20 ரூபாய்க்கும், வெங்காயம் 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25ரூபாய்க்கும், பீட்ரூட், கோஸ், கேரஸ் ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கோவையில் நடமாடும் காய்கறி விற்பனை மையங்களை தொடங்கி வைத்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

நெல்லை பாளையங்கோட்டையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments