போலீசாரின் தீவிர கண்காணிப்பு... வெறிச்சோடிய சாலைகள்..!

0 2389

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ழுழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து, முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கத்திப்பாரா மேம்பாலம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனப் போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. அண்ணா சாலையில் இ-பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லையில் போலி ஆவணங்களை கொண்டு இ பதிவு செய்து பயணித்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன்,அபராதமும் விதித்தனர்.

திருவள்ளூரில், அனைத்து முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது.

சேலத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம் மற்றும் நான்கு ரோடு, ஐந்து ரோடு உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடின.

மதுரையில் 18 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களின்றி தேவையின்றி சுற்றித்திரிவோரின் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன

கடலூர் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து, தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் பைக்குகள், கார்களை பறிமுதல் செய்தனர். மக்கள் நடமாட்டத்தை போலீசார் ட்ரோன் கேமரா மூலமாகவும் போலீசார் கண்காணித்தனர்.

முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான கருங்கல்பாளையம் காவேரி சோதனைச் சாவடியில் ஏராளமான வாகனங்கள் இ- பதிவின்றி பயணித்தன.

விழுப்புரத்தில் அவசியத் தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். செஞ்சியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை மடக்கி பிடித்த போலீசார், “தேவையில்லாமல் சுற்றி கொரோனாவை பரப்ப மாட்டேன்” என கைநீட்டி சத்தியம் செய்யவைத்து அனுப்பினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், முழு ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றித் திரியும் வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு, திரும்பிப் போகுமாறு போலீசார் ஒருவர் அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments