தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..!

0 5540

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. மாநிலம் முழுவதும் காவல்துறையினர் சாலையில் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் போன்றவற்றுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பால் விநியோகம் தடையின்றி நடந்து வருகிறது. சென்னையில் 300 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமுடக்கம் அமலானதால் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்களிலும் இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் காலையில் நிறுத்தப்பட்டன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் முழு ஊரடங்கு காலத்தில் 4,380 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நாள்தோறும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

இதேபோல் கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முழு ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அனுமதியின்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments