சினிமாபாணியில் ஒரு திகில் கொலை..! அமெரிக்க மாப்பிள்ளை ஏவிய கூலிப்படை...!

0 11795

நடிகர் சந்தானத்தின் உதவியால் மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உறவுக்காரப்பெண் மரணத்தில், விபத்து வழக்கு தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா பாணியில் அமெரிக்காவில் இருந்து திட்டமிட்ட  திகில் கொலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருவாரூர் அடுத்த தப்பளாம்புலியூரில் நடந்த சாலை விபத்தில் அஞ்சலக பெண் ஊழியர் ஜெயபாரதி இறந்ததாக முதலில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவுக்கார பெண்ணான ஜெயபாரதி திட்டமிட்டு சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் அவரது சகோதரர் போலீசாரின் புகார் அளித்தார்.

நடிகர் சந்தானத்தின் உதவியால் மாவட்ட காவல் கண்காணிப்பளர் கவனத்துக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் இது விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலைச் சம்பவம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லப்பட்ட ஜெயபாரதி , தன்னை பிரிந்து அமெரிக்காவில் வசிக்கின்ற தனது கணவர் விஷ்ணுபிரகாஷுக்கு அனுப்பிய நோட்டீசால் அவர் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு தீராத தலைவலியாக மாறிப்போன ஜெயபாரதியை தீர்த்துக்கட்ட தனது உறவினர்களான ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால் விபத்து என்று வழக்கை முடித்து விடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி பழைய வாகனம் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து பவித்திரமாணிக்கத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார். வாகனத்திற்கு ஓட்டுனராக பிரசன்னா என்பவர் இருந்துள்ளார்.

இந்த வாகனம் ஒரு நாள் முழுவதும் ஜெயபாரதியைத் பின் தொடர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. பின்னர் அவர் எப்போது, எந்த வழியாக வருவார் என எதிர்பார்த்து மோதினால் விபத்து என்று எல்லோரும் நம்பும் படியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி பணிமுடிந்து மொபட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது வாகனத்தை மோதியதோடு நிற்காமல் எதிரில் நின்ற பனைமரத்துடன் அவர் உடல் நசுங்கும் அளவுக்கு கொடூரமாக வாகனத்தை இயக்கி உள்ளனர். அதன் பின்னர் ஜெயபாரதியின் சடலத்தை அங்கிருந்து எடுத்து வந்து சாலையில் கிடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். இதையடுத்து கொலைக்கு மூளையாக இருந்த வாகன உரிமையாளர் செந்தில்குமார், ஓட்டுனர் பிரசன்னா ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த கொரூர கொலைக்கு அமெரிக்காவில் இருந்தபடியே திட்டம் தீட்டிக் கொடுத்த ஜெயபாரதியின் கணவர் விஷ்ணுபிரகாஷ் சில லட்சங்களை முன் பணமாக அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுவதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணுபிரகாஷ் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.

விஷ்ணு பிரகாஷின் கொலை திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியதூதரகத்துக்கு தெரிவித்து அவரை தமிழகம் வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்தின் உதவியாலும், அவரது உறவினர்களின் சாமர்த்தியத்தாலும் கொலை வழக்கில் துரிதமாக துப்பு துலங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments