தமிழகம் முழுவதும் தளர்வுகளில்லா ஊரடங்கு இன்று முதல் அமல்

0 4220

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அவசியமின்றி வெளியே செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி-மீன் கடைகள் போன்றவற்றுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழவகைகள், பால் மற்றும் குடிநீர் போன்ற இன்றியமையாப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மருந்தகம், பால் வினியோகம், ஊடகம்-பத்திரிகை துறை போன்ற மிகவும் அவசியமான பணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு காலத்தில் 4,380 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாள்தோறும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பணியாளர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. தொழிற்சாலைகள் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று தளர்வு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மின்சாதன விற்பனைக் கடைகள் திறந்திருந்தன. சென்னை தி.நகரில் திறக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மூடப்பட்டன.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நள்ளிரவுடன் நிறுத்தப்பட்டன. இதனால், வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடியது.

சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை இல்லாததால், மொத்தக் கடைகளில் இருந்து காய்கறிகள் வெளியேற்றப்பட்டன. நள்ளிரவில் ஏராளமான வேன்கள், லாரிகள் காய்கறிகளை ஏற்றி இறக்குவது வழக்கம். நேற்று தொழிலாளர்களோ, வியாபாரிகளோ இல்லாததால் சந்தை முழுவதும் ஆள்அரவமின்றிக் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments