முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற வேண்டும் - முதலமைச்சர்

0 2377

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு இன்றியமையாப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா நிவாரணத் தொகை பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு காய்கறி, பால் போன்ற இன்றியமையாப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முழு ஊரடங்கின் போது விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், முழு ஊரடங்கைச் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அணுகக் கூடாது என்றும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கோவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு உள்ளதாகவும், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments