அனைத்துக் கடைகளும் திறப்பு, அலைமோதும் மக்கள் கூட்டம்..!

0 12546

நாளை முதல் ஒருவாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால், இன்று முழுவதும் அனைத்து கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

சென்னை தியாகராயநகர் காய்கறி சந்தையில் குவிந்த மக்கள், ஒரு வாரத்திற்கு தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். பலரும் கீரைகளை வாங்குவதிலேயே ஆர்வம் காட்டினர். இதனால் சந்தையில் தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடைகள், மீன் விற்பனை அங்காடி, காய்கறி, பழ, பூ, கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளனர்.

 சென்னை கொத்தவால்சாவடி சந்தைப் பகுதியில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க திருவிழா கூட்டம் போல மக்கள் குவிந்துள்ளனர். தனிமனித இடைவெளியை மறந்து முண்டியடித்து கொண்டு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டுமே அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை டவுன் பகுதியில் மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளிலும்,
சேலம் டவுன், சின்னக்கடை வீதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளிலும் திரண்ட மக்கள், ஒருவாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் ஆட்டுக்கறி கிலோ 50 ரூபாய் அதிகரித்து 750 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 அத்தியாவசியப் பணிகளுக்காக பொதுமக்கள் அதிகளவில் வெளியேறுவதால் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரக்கடையில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், மினி வேன்கள் , கார்கள் மற்றும் பேருந்துகள் வரிசைகட்டி நிற்கின்றன.

 இதேபோல் சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் விதிகளை மீறி வாடிக்கையாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஏராளமான அசைவ பிரியர்கள் திரண்டதால், மார்க்கெட்டின் வெளி வளாகத்தில் வியாபாரம் நடைபெற்றது. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க அம்பத்தூர் பழைய எம்.டி.எச் சாலை, கே.கே சாலை, ஷாப் தெரு போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்ததால் மார்க்கெட் பகுதியே திருவிழா போல காட்சி அளிக்கிறது. புழல் அடுத்த காவாங்கரையிலும் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் திரண்ட மக்கள், சமூக இடைவெளியின்றி, மீன்கள் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். இதேபோல் காஞ்சிபுரம் ராஜாஜி சந்தைப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

 

திருப்பூர் - பல்லடம் சாலை, தென்னம்பாளையம் மீன் மற்றும் காய்கறி மார்க்கெட்களில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

கோவை உக்கடம் பகுதியிலுள்ள காய்கறி மார்க்கெட்டில் திரண்ட மக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுமாறு, ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர். காய்கறி மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் பொருட்களை வாங்கிய 8 பேருக்கு தலா 200 ரூபாயை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments