ஆக்சிஜன் சேவை வழங்கும் ஜெயின் அமைப்பினர்

0 3025

சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையிருப்பின், அவர்கள் முழுமையாக குணமாகும் வரையில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர் சென்னையை சேர்ந்து ஜெயின் அமைப்பினர். இது குறித்த செய்தித் தொகுப்பு.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி வருகின்றன. அதே நேரம் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சிலருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். எனவே புதிதாக கொரோனா பாதிப்புடன் வரக்கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜனுடன் படுக்கை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு வீடுகளில் இருந்தவாறு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் சிகிச்சை மேற்கொள்வதற்கான உதவிகளை சில தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயின் இண்டர் நேஷ்னல் டிரேட் ஆர்கனைஷேசன் என்ற அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். 5லிட்டர் மற்றும் 10லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை இவர்கள் வழங்கி வருகின்றனர்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பிவரும் நிலையில் தேவைப்படும் நோயாளிகள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் இந்த சேவையை செய்து வருவதாக ஜெயின் அமைப்பினர் கூறினர்.

சென்னையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் தேவையிருப்பின் 9434343430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நோயாளியின் பெயர், அவருக்கு தொற்று உறுதியானதற்கான சான்றிதழ், ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்பதற்கான மருத்துவ சான்று ஆகிவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் அடுத்த 2 மணிநேரத்தில் அவர்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும். முன்வைப்புத் தொகையாக 5ஆயிரம் ரூபாய்கான காசோலையை செலுத்தி ஆக்சிஜன் செறிவூட்டியை நோயாளிகள் தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என்றும், 5நாட்களுக்கு பின்னர் மெஷினை திருப்பி வழங்கும் போது முன்வைப்பு காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிடும் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் செறிவூட்டியை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான வீடியோவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் முழுவதும் சேவை அடிப்படையில் இலவசமாக இந்த பணியை மேற்கொண்டு வருவதாகவும் ஜெயின் அமைப்பினர் தெரிவித்தனர்.

இதுபோன்ற உதவிகளை தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டால் ஆக்சிஜன் தேவைக்காக மருத்துவமனைகளில் இருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவது நிச்சயம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments