கடலூரில் வெண்டிலேட்டர் மிஷின், ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழப்பு? துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாக ஆட்சியர் விளக்கம்

0 1797

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மருத்துவர் அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா வியாழக்கிழமை உயிரிழந்தார். ராஜாவுக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் முகக்கவசத்தை, வேறொரு நோயாளிக்கு பொருத்த மருத்துவர், செவிலியர் எடுத்துச் சென்றதால், தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கூறி, அவரது மனைவி கதறி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்த வீடியோ வைரலான நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இவ்வளவு பெரிய கொடூரமான சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, மருத்துவமனையில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட ஆட்சியர், முதற்கட்ட விசாரணையில் ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளதாகவும், ஆக்சிஜன் விநியோகம் கிடைக்காமல் ராஜா உயிரிழந்ததாக கூறுவது தவறு எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ பணிகள் இயக்குநருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜாவுக்கு அனுமதித்த நாள் முதலே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனவும், சம்பவத்தன்று தனக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் முகக்கவசத்தை கழட்டி வைத்துவிட்டு, அவர் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், அவசர சிகிச்சைக்கு வந்த வேறொரு நோயாளியின் உயிரைக் காக்கும் பொருட்டு, ராஜாவுக்கு மாற்று ஆக்சிஜன் முகக்கவசம் பொருத்த தயாராக வைத்துவிட்டு தான், ஏற்கனவே பொருத்தியிருந்த ஆக்சிஜன் முகக்கவசத்தை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா உணவருந்திக் கொண்டிருந்ததாலும், ஆக்சிஜன் முகக்கவசம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாலும் தான் எடுத்துச் சென்றதாகவும், அப்போது ராஜாவின் உடல்நிலை சீராகவே இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments