வீட்டிலேயே இன்ஸ்டன்ட் கொரோனா பரிசோதனை... வந்துவிட்டது RAT டெஸ்ட் கிட்..!

0 8783

கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் நடவடிக்கையாக, வீட்டிலேயே சுயமாக 15 நிமிடத்தில் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் துரித பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை வீட்டிலேயே 15 நிமிடத்திலேயே கண்டறிந்து கொள்ளும் கருவியை யார் பரிசோதனைக்கு பயன்படுத்தலாம், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெளிவான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட மைலேப் டிஸ்கவர் சொலியூஷன்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. உடனடியாக செயல்பட்டு தொற்றை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதித்தவர்களின் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இந்த ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஏனையோர் இந்த கருவியை பயன்படுத்தி டெஸ்ட் செய்ய அறிவுறுத்தப்படவில்லை என ஐசிஎம்.ஆர் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்த கருவி மூலம் பரிசோதனை செய்து பாசிட்டிவ் என முடிவுகள் வந்தால் அவர்கள் மேற்கொண்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில் ஆர்டி பிசிஆர் பரிசோதனையுடன் ஒப்பிடுகையில் இந்தவகை உபகரணங்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை காட்டவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், அறிகுறிகள் இருந்து பரிசோதனையில் முடிவுகள் நெகட்டிவ் என வந்தால், உடனடியாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி ஒன்றின் விலை 250 ரூபாய் என நிர்ணயித்துள்ள மைலேப் நிறுவனம், அடுத்த வாரம் முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் அறிவித்துள்ளது. தற்போது வாரத்துக்கு 7 மில்லியன் கிட்டுகளை தயாரித்து வருவதாகவும், அடுத்த வாரத்திலிருந்து வாரத்துக்கு 10 மில்லியன் கிட்டுகள் தயாரிக்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைலேப் கிட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கி ஐசிஎம்ஆர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. மைலேப் கிட் வாங்கும்போது அதில் மூக்குத்துவாரத்திலிருந்து மாதிரியை எடுப்பதற்கான பஞ்சுடன் கூடிய நேசல் ஸ்வேப், அதனை சேமிக்க ஏற்கெனவே திரவம் நிரப்பப்பட்ட டியூப், சோதனை அட்டை மற்றும் சோதனைக்கு பின் உபகரணத்தை அப்புறப்படுத்த தேவையான பயோ ஹசார்ட் பேக் (bag) ஆகியன இருக்கும்.

இந்த உபகரணத்தை வாங்குவோர் Mylab Coviself செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், மொபைல் செயலியில் காட்டும் வழிகாட்டுதல் படி, ஸ்வேபைக் கொண்டு இரு மூக்குத் துவாரங்களிலும் குறைந்தது 5 முறையாவது மென்மையாக சுழற்றி சளி மாதிரியை சேமித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை திரவம் நிரப்பப்பட்ட டியூப்பில் செலுத்திவிட்டு ஸ்வேபின் எஞ்சிய பகுதியை உடைத்துவிட்டு, டியூப்பை நன்றாக இருக்கி மூடிவிடவேண்டும்.

பின்னர் அந்த திரவத்தில் இரண்டு சொட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சோதனை அட்டையில் செலுத்த வேண்டும். 15 நிமிடங்கள் வரை முடிவுக்குக் காத்திருக்கலாம். பாசிட்டிவ் என்றால் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் T என்ற பகுதியில் இன்னொரு அழுத்தமான கோடு உண்டாகும். நெகட்டிவ் என்றால் C என்ற பகுதியில் மட்டுமே கோடு இருக்கும்.

20 நிமிடங்களுக்கு மேல் ஏற்படும் எந்த ஒரு முடிவும் ஏற்கத்தக்கதல்ல. அதனை புறக்கணித்துவிடலாம். சோதனை முடிந்த பின்னர் உபகரணத்தின் அனைத்து பகுதிகளையும் பயோ ஹசார்ட் பையில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த பரிசோதனை முடிவடைந்தவுடன் அந்த செல்போனிலேயே பரிசோதிக்கப்பட்ட ‘ஸ்ட்ரிப்பை’ புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மொபைல் செயலியின் மூலம் பரிசோதனை முடிவுகளை தாங்களே சுயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த தரவுகள் அனைத்தும் ஐ.சி.எம்.ஆரின் பரிசோதனை தளத்துடன் இணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சர்வரில் சேமிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments