வலிமை படத்தில் அஜித்துடன் நடித்த குழந்தை நட்சத்திரம்... சிறுவனின் குடும்பத்துக்கு கொரோனாவால் நேர்ந்த துயரம்!

0 7471
குழந்தை நட்சத்திரம் ஆலமின் தாய் யாஸ்மின்.

ந்தியன் 2-வில் கமலுக்கு பேரனாக நடித்த சிறுவனின் கர்பிணி தாயார் கொரோனாவால் உயிரிழக்க, இறுதி சடங்கிற்கு கூட பணமில்லாமல் அவரது குடும்பம் அவதிப்பட்ட கொடுமை நடந்துள்ளது. 
 
சென்னை ராயுரபுத்தைச் சேர்ந்தவர் முபாரக், மருந்து விற்பனை பிரிதிநிதியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி 34 வயதான யாஸ்மின். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஆலம் என்ற 10 வயது மகனும் உள்ளனர். ஆலம் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரம். இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் - 2 படத்தில் நடிகர் கமலஹாசனின் பேரனாக நடித்துள்ளார். நடிகர் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார் குழந்தை நடசத்திரம் ஆலம். இவரது தந்தை முபாரக் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி அதனால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கிவிட,  கொரோனாவின் முதல் அலையில் இவர்களது குடும்பம் சிக்கி பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்கு உள்ளானது. 
 
இந்த சூழ்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையில் குழந்தை நட்சத்திரம் ஆலமிற்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு, பின்னர் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரிக்கும் தொற்று பரவியுள்ளது. ஆலமின் தாயான யாஸ்மின் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தொற்று தீவிர நிலைக்கு செல்ல, வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரது முயற்சியினால் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டார். ஆனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஆலம் குடும்பத்திற்கு பல லட்சங்கள் செலவு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சிறுவன் ஆலமுடன் வெப் சீரியஸ் தொடரில் நடித்த பெங்களூரைச் சேர்ந்த நவீன் என்பவர், சமூக வலைதளங்கள் மூலம் ஆலம் குடும்பத்தின் நிலமையை பகிர்ந்து உதவி கேட்க, அவரது நண்பர்கள் பலர் பண உதவி செய்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டாகவே இந்த குடும்பத்திற்கு நவீன் பொருளாதார ரீதியாக உதவியும் வந்துள்ளார்.
 
நவீனின் மனைவி  உணவு பொருள் மூலம் ஒரு கர்ப்பிணி உயிருக்கு போராடுவதை உணர்த்தும் வகையில் வரைந்த ஓவியம் மூலம், சிறுவன் ஆலமின் குடும்ப நிலையை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த படம் வைரலானதைத் தொடர்ந்து அதன் மூலம் திரட்டிய ஒன்பது லட்சம் ரூபாயை சென்னை தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி, யாஸ்மினுக்கு சிசேரியன் செய்து குழந்தையை உயிருடன் காப்பாற்றிவிட்டனர். ஒரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விட, மற்றொரு பக்கம் குழந்தையின் தாய் யாஸ்மின் கொரோனாவால் நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு மூச்சு திணறி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
பச்சிளங் குழந்தையுடன் ஆலமின் தந்தை முபாரக் தனது மனைவியின்  உடலை எடுத்துச் செல்ல கூட பணமில்லாமல் தவித்துள்ளார். மீண்டும் நண்பர்கள் சிலர் உதவியுடன் யாஸ்மின் உடல் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தாய் இறந்து மூன்று நாட்களாகியும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஆலமிற்கும், அவனது சகோதரிக்கும் தாய் யாஸ்மின் இறந்தது தெரியாது. மேலும் கொரோனாவின் கோரத் தண்டவத்தால் சிறுவன் ஆலமின் குடும்பம் ஆளுக்கொரு திசையில் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஆலம் நடித்ததற்கான சம்பள தொகை மூன்றரை லட்சத்தை, இந்தியன் - 2, வலிமை பட நிறுவனங்கள்  வழங்க வேண்டும் என அவர்களது குடும்ப நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் இப்படியான பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறைந்தபட்சம் இவர்களது பொருளாதார இழப்புகளை சரிசெய்துகொள்ள உரிய தீர்வை அரசு வழங்க வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
 
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments