கொரோனா தடுப்பூசி முகாம்... முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

0 2191

திருப்பூரில் 18 முதல் 44 வயது வரையுள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

பின்னலாடை, சாயப்பட்டறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

முன்னதாக காலை சேலத்துக்குச் சென்ற முதலமைச்சர் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவரைச் சந்தித்த முதுநிலை மருத்துவர்கள் கொரோனா சூழலில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தனர்.

கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா எனக் கேட்டறிந்தார்.

இந்த மையத்தை விரிவாக்கிக் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதி படுக்கைகளை ஏற்படுத்தி நாட்டிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றவும், 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

சேலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் திடீரெனச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மருத்துவ வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்துப் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 253 படுக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 220 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.

சரவணம்பட்டி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments