500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்.. முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

0 4007
சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்டு வரும் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கொரோனா சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரைச் சந்தித்த முதுநிலை மருத்துவர்கள் கொரோனா சூழலில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தனர்.

கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா எனக் கேட்டறிந்தார்.

சேலம் உருக்காலையில் இருந்து சிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து உருக்காலை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் திடீரெனச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணிநேர அவசர மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பார்வையிட்டார். அங்குப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் மருத்துவ வசதிகள், தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments