கி.ராஜநாராயணன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

0 1542

மறைந்த முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடைச்செவலில் அரசு மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க எரியூட்டப்பட்டது.

கரிசல் இலக்கியத்தின் தந்தை, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திங்களன்று புதுச்சேரியில் 98ஆவது வயதில் காலமானார். கி.ராஜநாராயணன் உடல் இடைச்செவலில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பொது மக்கள், அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து கி.ராஜநாராயணன் உடல் அவர் குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறையினரின் இசைவாத்தியம் இசைக்கப்பட்டுத் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்தபின்னர் கி.ராஜநாராயணனின் உடல் எரியூட்டப்பட்டது. கரிசல் இலக்கியத் தந்தை இறுதிக்காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்தாலும் சொந்த ஊரில் கரிசல் மண்ணில் அவரது உடல் அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments