கொரோனா வார்டில் கூட்டம்: நோயாளிகளின் உறவினர்களால் சிக்கல்..!

0 1323

சென்னை ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்த உறவினர்கள் வெளியேற்றப்பட்டனர். தொற்றுத் பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை புரிந்து கொள்ளாமல், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை,சாதாரண படுக்கை என சுமார் 2 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு ஒரு நோயாளியுடன் பணிவிடை செய்வதற்காக ஒரு உறவினர் மட்டுமே தங்கி இருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு நோயாளியுடன் 3 பேர், 4 பேர் என கூடுதல் எண்ணிக்கையில் உறவினர்கள் இருந்து வந்ததால் கொரோனா வார்டில் இட நெருக்கடியும், தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதனை கருத்தில்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் காவலர்கள் மூலம் கொரோனா வார்டில் இருந்து அனைத்து உறவினர்களையும் வெளியேற்றினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்து உறவினர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவர்களும், காவலர்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மூன்று மணி நேரமாக தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் காவலர்கள் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு, மூடி வைத்திருந்த கதவை திறந்து கொரோனா வார்டுக்குள் திபு..திபுவென புகுந்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் அதிகப்படியாகத் தங்கியிருந்த உறவினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் ஒரு வார்டில் 100 கொரோணா நோயாளிகள் உள்ளதாகக் கூறும் அவர்களின் உறவினர்கள், நோயாளிகளைப் பராமரிக்க நான்கு செவிலியர்கள் மட்டுமே இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு மட்டுமே வருவதாகவும், குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு கூட ஆள் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அதன் தொடர்புச் சங்கிலியை அறுக்கவும் அரசு எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும், அரசின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்பவர்களால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments