மூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன்..! பட்டாலும் புத்தி வராது

0 5524
மூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன்..! பட்டாலும் புத்தி வராது

சென்னை ஆவடியில் முகநூல் காதலனுடன் குடித்தனம் நடத்தச்சென்ற பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக, காதலன், காதலனின் தாய், தந்தை சகோதரி உள்ளிட்டோர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 பெண்குழந்தைகளையும் ஆசிரியர் கணவரையும் பிரிந்து முகநூல் காதலில் விழுந்து முச்சந்தியில் தவிக்கும் பெண்ணின் பரிதாபம் 

சென்னை அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்த கல்பனா என்ற 38 வயது பெண் தான் முக நூல் காதலில் விழுந்ததால் வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்.

பள்ளி ஆசிரியரை திருமணம் செய்து 11 வருடம் சேர்ந்து வசித்து வந்த கல்பனாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பொழுதை கழித்ததால் குடும்பத்தில் குழப்பம் உருவாகியுள்ளது.

கணவரையும் 2 குழந்தைகளையும் பிரிந்து தனித்து இயங்கிய கல்பனா தஞ்சாவூரில் உள்ள வங்கி ஒன்றில் கிரெடிட்கார்டு விற்பனை பிரிவில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது முப்பொழுதும் கற்பனையுடன் மூழ்கியதால் முக நூலில் ஆவடியை சேர்ந்த வெங்கடேஷுடன் காதல் மலர்ந்துள்ளது.

முக நூல் காதலனை நம்பி புறப்பட்டுவந்த கல்பனாவுக்கும், காதலன் வெங்கடேஷுக்கும் திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல வெங்கடேசனின் செயல்பாடு இருந்துள்ளது.

ஆரம்பத்தில் தான் சிங்கிள் என்று வெங்கடேஷ் பழகி இருந்த நிலையில் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த பெண்ணை பிரிந்து தன்னை திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததால் கல்பனா காண்டாகியுள்ளார்.

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் தான் சொல்படி கேட்டு நடக்காவிட்டால் முதல் இரவின் போது எடுத்த ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதோடு பாலியல் தொழிலில் தள்ள மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இந்த கொடுமைக்கு வெங்கடேசனின் தாய் விஜயா, தந்தை ரங்கசாமி, தங்கை புவனேஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும், போலீசில் புகார் அளித்த கல்பனா, தனது 5 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாயை பறித்து வைத்துக் கொண்டதாகவும் முக நூல் காதலன் வெங்கடேஷ் மீது ஆவடி போலீசில் தெரிவித்தார்.

காதலனை அழைத்து விசாரித்த காவல்துறையினர் அவரது செல்போனில் இருந்த கல்பனாவின் அந்த மாதிரி ஆபாச வீடியோக்களை கைப்பற்றினர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வெங்கடேஷ், அவனது தாய், தந்தை , சகோதரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக முகநூல் காதலனை நம்பி நல்ல குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார் கல்பனா.

முகநூல் பொழுது போக்கை முழு நேரமாக நம்பி மூழ்கினால் என்ன மாதிரி விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கைப்பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments