கரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்

0 1668
கரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்

கரிசல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்.

அவருக்கு வயது 99. கி.ரா. மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

1922ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் கரிசல் காட்டு மக்களையும், அவர்களின் வாழ்வியலையும் பதிவு செய்த தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா., புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். அனைத்து வட்டார இலக்கியங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார்.

சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக்கதைகள் என பல்வேறு நூல்களையும், புதினங்களையும் படைத்த இவரின் கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது, கனடா நாட்டில் உயரிய விருது ஆகியவற்றையும் தன்வசமாக்கியவர்.

கதவு, கி.ரா.பக்கங்கள், கண்ணீர், கோமதி போன்றவை இவரது படைப்புகளில் மிக முக்கியமானவை

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த கி.ராஜநாராயணன், வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவரது உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லியை இழந்துவிட்டதாக கி.ரா. மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்ளவரை கி.ரா.வின் புகழ் வாழும் என்ற முதலைமைச்சர், கிரா புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்துள்ளார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கி.ரா. மறைவு செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments