கொரோனா கட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 1227
கொரோனா கட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நோய்தொற்று பரவலை தடுக்க  வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். 

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்  நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர்  எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. எனவே தமிழகத்திற்கு கூடுதலான ஆக்சிஜன் வழங்குமாறும், தடுப்பூசியை அதிகரித்து வழங்குவது தொடர்பாகவும், பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் போர்ப்படைத்தளபதிகள் போல் முக்கிய பங்கை வகிப்பதாக பாராட்டி உள்ளார். 

கொரோனா முதல் அலையின் போது வேளாண் துறைக்கு அரசு கட்டுப்பாடு எதையும் விதிக்காத போதும், விவசாயிகள் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றியதாக குறிப்பிட்ட மோடி, இதுவே நமது கிராமங்களின் பெரிய பலம் எனவும் சிலாகித்தார்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டிய மோடி, நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இதை கவனிக்க வேண்டும் என்றார்.

மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க மிகப்பெரிய முயற்சிகள் நடைபெறுவதாகவும் மோடி கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments