பெண் முன்கள பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்..!

0 3403
பெண் முன்கள பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்..!

சென்னையில் வீடு வீடாகச் சென்று கொரோனா நோய் அறிகுறியை பரிசோதிக்கும் முன்களப் பெண் பணியாளரை, காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை தந்த நபரை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வீடு வீடாகச் சென்று நோய் தொற்று அறிகுறிகள்  இருக்கிறதா என அறிய இளம் பெண்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

சென்னை ஏழுகிணறு பகுதியில் முன்கள பணியாளரான 27 வயது இளம் பெண் ஒருவர் போர்ச்சுகீசு சர்ச் தெருவில் உள்ள சதக்கத்துல்லா என்பவரது  வீட்டிற்கு சென்றுள்ளார்.

சதக்கத்துல்லாவிடம் வீட்டில் யாரெல்லாம் உள்ளனர்? யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா ? என கேட்டுள்ளார். தனது மனைவிக்கு காய்ச்சல் இருப்பதாகவும் வீட்டிற்குள் வந்து உடல் வெப்ப நிலையை பரிசோதிக்குமாறும் கூறியதால் அந்த இளம் பெண் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

வீட்டிற்குள் யாரும் இல்லை என்பதை அறிந்து சுதாரிப்பதற்குள், கதவை தாழிட்ட சதக்கத்துல்லா திடீரென இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலுக்கு முயன்றான்.  அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டு கொண்டே வெளியில் ஓடி வந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, நடந்ததை அறிந்து சதக்கத்துல்லாவை நையப்புடைத்தனர்.

பின்னர், இளம் பெண் கொடுத்தப் புகாரில்  வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் 54 வயதான சதக்கத்துல்லாவை கைது செய்தனர். 

போலீஸ் விசாரணையில், வீட்டில் யாருமில்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு,  திட்டமிட்டு வீட்டிற்குள் அழைத்து சென்று அத்துமீறியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மகளிர் போலீசார் அவனை சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments