ஊரடங்கை மதிக்காமல் பயணம்..! கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை...

0 2098
ஊரடங்கை மதிக்காமல் பயணம்..! கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கூட்டமாக நடமாடி வருகின்றனர்.

வாகன போக்குவரத்து வழக்கம்போலவே காணப்படுகிறது. வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை : அத்தியாவசிய தேவைகளின்றி சாதாரண நாட்களை போல் சாலைகளில் உலா வருவோரின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கை, முறையாக நடைமுறைப்படுத்த சென்னையின் பல இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதும் மக்கள் சாதாரண நாட்களில் பயணிப்பது போல அதிகளவில் சாலைகளில் வாகனங்களில் செல்கின்றனர்

அதே போல் கொரோன தடுப்பு வழிமுறைகளாக அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத, முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

மதுரை : கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க மதுரை நெல்பேட்டை, கீழமாரத்து வீதி, தயிர் மார்கெட், கீழமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்தனர்.

மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டப்படி ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்திவந்த போதிலும், அதனை பொருட்படுத்தாத மக்கள், பொருட்களை வாங்குவதிலேயே கவனம் செலுத்தினர்.

திருச்சி : கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட், மேலப்புலிவார் சாலைக்கு மாற்றப்பட்டது. இதனை அறிந்த மக்கள், காய்கறி வாங்க அங்கு குவிந்தனர்.

அதேபோல் தெப்பக்குளம் காமராஜர் சிலையிலிருந்து மரக்கடை வெல்லமண்டி சாலை வரை இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் முன்பு குவிந்த பலர், முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவித்து கொண்டே இருந்தாலும், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை.

சேலம் : சேலத்தில்  ஊரடங்கை பொருட்படுத்தாத மக்கள் வாகனங்களில் உலாவுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் நான்கு ரோடு ,ஐந்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் காலை முதலே அதிக அளவில் சென்றுகொண்டிருக்கின்றன.

காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் குவிந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் : தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் திருவள்ளூரில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விதிகளை கடைபிடிக்காமலும், ஒரு சிலர் முககவசம் அணியாமலும் பொருட்களை முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.

தஞ்சை : தஞ்சை அய்யங்கடைத் தெருவில் ஊரடங்கு உத்தரவை மீறி பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் திரண்டனர். முழு ஊடரங்கு காரணமாக காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அங்கு இடைவெளியின்றி ஒன்று கூடிய மக்கள் இறைச்சி, மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கரூர் : நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீறி கரூர் மாவட்டத்தில் உள்ள தினசரி சந்தைகளில் அதிகளவில் மக்கள் குவிந்தனர்.

கொரோனா பரவலை பொருட்ப்படுத்தாமல் தினசரி சந்தைகளான காமராஜ் மார்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி அவசியத் தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரட்டை மண்டபம் சந்திப்பு, சங்கரமடம் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வந்தோர் மீது வழக்குப்பதிவு செய்யதோடு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தேனி : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாகனப்போக்குவரத்து வழக்கம் போல் காணப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணராமல் அவசியத்தேவையின்றி வாகனங்களில் சுற்றியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ஆண்டிப்பட்டி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், மதுரையில் இருந்து இபதிவு செய்த வாகனங்களை மட்டும் மாவட்டத்திற்குள் அனுமதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments