குஜராத்தை அச்சுறுத்தும் அதிதீவிரப் புயல்..!

0 2344
குஜராத்தை அச்சுறுத்தும் அதிதீவிரப் புயல்..!

அரபிக் கடலில் உருவான அதிதீவிரப் புயல் குஜராத்தின் போர்பந்தர் - மகுவா இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவான புயல் மேன்மேலும் வலுப்பெற்று அதிதீவிரப் புயலாக உருவெடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று காலை எட்டரைமணி நிலவரப்படி மும்பைக்கு மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத்தின் வெராவலுக்குத் தென்கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும் அதிதீவிரப் புயல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று மாலை குஜராத் கடற்பகுதியை அடையும் என்றும், இரவு 8 மணி முதல் 11 வரை குஜராத்தின் போர்பந்தர் - மகுவா இடையே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிதீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புயலின் காரணமாகக் கோவாவிலும், மகாராஷ்டிரத்தின் கடலோர மாவட்டங்களிலும், குஜராத்திலும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 1998ஆம் ஆண்டுக்குப் பின் வந்துள்ள புயல்களிலேயே இது அதிக ஆற்றல் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

புயல் முன்னெச்சரிக்கையாக மும்பை பன்னாட்டு விமான நிலையம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டது. பாந்த்ரா - ஒர்லி இடையே கடல் மேல் உள்ள பாலம் வழியே வாகனப் போக்குவரத்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. 

குஜராத்தில் போர்பந்தர், அம்ரேலி, ஜுனாகர், கிர் சோம்நாத் உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பெருமளவில் சேதம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக போர்பந்தர் - பாவ் நகர் மாவட்டங்களில் மட்டும் கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  குஜராத்தில் 2200 மீன்பிடி படகுகளும், மகாராஷ்டிரத்தில் நாலாயிரத்து 500 மீன்பிடி படகுகளும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

வணிகக் கப்பல்களுக்கும் கடலில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் உள்ளோருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 65 அணிகள் மகாராஷ்டிரம், டையு டாமன், குஜராத் ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 35 அணிகள் தேவையான இடங்களுக்குச் செல்லத் தயார் நிலையில் உள்ளதாகவும் அதன் தலைவர் பிரதான் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments