நிரம்பும் மருத்துவமனைகள்..! தயாராகும் கூடுதல் படுக்கைகள்...

0 1503
நிரம்பும் மருத்துவமனைகள்..! தயாராகும் கூடுதல் படுக்கைகள்...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், சில இடங்களில் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிரமத்தை தவிர்க்க கூடுதலாக படுக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் : அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றால், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பின.

புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல ஆரோக்கிய மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 347 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளையும் உடனடியாக சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே படுக்க வைக்கப்பட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1569 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

தற்போதய நிலையில் 30 சாதாரண படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாகவும், ஆக்சிஜன் படுக்கைகள் தேவை குறித்து சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால், இரும்பாலை பகுதியில் 500 ஆக்சிஜன் வசதியுடன் கொண்ட படுக்கைகளுடன் சிகிச்சை மையம் இரவு, பகலாக தயாராகி வருகிறது. சிகிச்சை மையத்திற்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்க, அருகிலேயே 3 டிரான்ஸ்பார்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் நிறைவடையும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இரும்பாலையில் உள்ள ஆக்ஜிசன் பிளாண்டில் இருந்து, தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் புதிதாக வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு 250 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 50 படுக்கைகளும் நிரம்பிய நிலையில், 150 சாதாரண படுக்கைகள் மட்டுமே மீதமுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments