”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..! காவல்துறையின் மனிதநேயப் பணி

0 7490

சென்னையில் ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்துகள் கிடைக்காமல் தவிக்கும் முதியோருக்கும், வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கும் உதவக் கிழக்கு மண்டலக் காவல் துறையினர் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளனர். இதன் செயல்பாடுகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டில் தனியாக உள்ள முதியவர் விஸ்வநாதன் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், ஊரடங்கு காலத்தில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், காவல் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அவரைத் தொடர்பு கொண்ட பெண் காவலர், உதவி ஏதும் தேவையா எனக் கேட்டுள்ளார்.

இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையைக் கூறியதும், அடுத்த ஒரு மணி நேரத்தில் விஸ்வநாதனைக் காவல் துறையினரின் வாகனத்தில் அழைத்துச் சென்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

சென்னை காவல் துறை கிழக்கு மண்டலத்தில் தனியாக வாழும் ஆயிரத்து ஐந்து முதியவர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைச் செய்யக் கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டங்களில் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் தனியாக வசிக்கும் முதியவர்கள் பட்டியலை வைத்தும், கொரோனா தொற்றால் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் பட்டியலை மாநகராட்சி மூலம் பெற்று தொடர்பு கொண்டும் தேவைகளை கேட்டு உதவி வருகின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்போருக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உதவிக்கு அழைத்தாலோ, அல்லது ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அழைத்தாலோ அவர்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் போன்ற காவல் துறையின் வாகனமும் தயார் நிலையில் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு மையத்தை அணுக 044 23452221 மற்றும் 044 23452530 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காவல் துறையின் பணி ஊரடங்கை நடைமுறைப்படுத்திக் கண்காணிப்பது தான் என்று இருந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments