மனைவிக்காக மதில் சுவர்.. அதன் பிறகும் வேறொருவருடன் தொடர்பா..? கழுத்தை அறுத்த சந்தேகன்

0 252987
மனைவிக்காக மதில் சுவர்.. அதன் பிறகும் வேறொருவருடன் தொடர்பா..? கழுத்தை அறுத்த சந்தேகன்

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மனைவி எவரிடமும் பேசிவிடக்கூடாது என்று வீட்டை சுற்றி உயரமாக மதில் சுவர் கட்டிய கணவன், மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட போது மனைவியின் போன் பிஸியாக இருந்ததால் சந்தேகம்  அடைந்து கழுத்தை அறுத்து கொலை செய்த விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழ் சினிமா ஒன்றில் தன் மனைவியின் செல்போன் நம்பருக்கு போன் செய்யும் போது அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக வரும் தகவலை கேட்டு காமெடி நடிகர் சூரி விரக்தியில் புலம்புவார்.

நிஜத்தில் அதே போன்ற ஒரு சந்தேக கணவர் , மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

அங்குள்ள வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா, இவரை விட சற்று அழகாக இருப்பார் என்று கூறப்படுகின்றது. இதனால் தனது மனைவியை பிறர் பார்த்துவிடக்கூடாது என்பதில் அதீத சிரத்தை எடுத்துக் கொள்வார். அனாவசியமாக மனைவி குழந்தைகளை வெளியில் அழைத்துச்செல்லமாட்டார்.

வீட்டை எவரும் எட்டிப்பார்த்து விடக்கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி மதில் சுவரையும் உயர்த்தி கட்டியுள்ளார். டெயிலரிங் முடித்துள்ள உமா பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுப்பதால் அவரை தேடி ஒரு சில பெண்கள் வந்து சென்றுள்ளனர். அந்த பெண்களிடம் உமா, செல்போனில் பேசுவதை கூட சந்தேகக் கண் கொண்டு உற்று நோக்கி வந்துள்ளார் ரமேஷ்..!

இந்த நிலையில் கணவரின் சந்தேக டார்ச்சர் தாங்க இயலாமல் அவருடன் கோபித்துக் கொண்டு உமா, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் மனைவி வேறு யாருடனோ சென்றுவிட்டார் என்று தாய் வீட்டிற்கு புகார் சொல்லச் சென்ற கணவர் அங்கு தனது மனைவி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் இனி இது போன்று சந்தேகம் கொள்ளமாட்டேன் என்று கூறி சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

சம்பவத்தன்று கடைக்கு சென்றிருந்த ரமேஷ், உமாவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த போது , உமாவின் செல்போன் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. அந்த வேறு ஒருவர் யாராக இருக்கும் ? என்று மீண்டும் எழுந்த தீராத சந்தேகத்துடன் வீட்டிற்கு வந்து சண்டையிட்டார் ரமேஷ்.

மனைவி எவ்வளவோ எடுத்துகூறியும் சமாதனம் அடையாத ரமேஷ், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான், தாயின் அலறல் சத்தம் கேட்டு விழிந்த குழந்தைகளில் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார், தீரா சந்தேகத்தால் கொடூர கொலையாளியாகி நின்ற ரமேஷை சுற்றி வளைத்து பிடித்தனர் , கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் தான் வீட்டில் இல்லாத நேரங்களில் மனைவி வேறு நபர்களுடன் செல்போன் பேசி வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒருவருக்கு போன் செய்யும் போது , செல்போன் பிஸியாக இருந்தால், அவர் வேறுருவருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கும் தகவல் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு என்பதைக்கூட உணராமல் மனைவியை கொலை செய்ததோடு இரு குழந்தைகளையும் அனாதையாக தவிக்க விட்டுள்ளதுதான் சோகத்தின் உச்சம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments