கொரோனா வார்டுக்குள் உறவினர்கள்..! வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகம்...

0 1620
கொரோனா வார்டுக்குள் உறவினர்கள்..! வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகம்...

சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா வார்டுக்குள் நோயாளிகளின் உறவினர்கள் திரளாக சென்று வந்த நிலையில் அவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து கொரோனா நோயாளிகளின் உறவினர்களை ஒட்டு மொத்தமாக அங்கிருந்து வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள 966 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் முழுவதுமாக நிரம்பிவிட்டன. சிகிச்சைக்காக வரும் புதிய நோயாளிகள், இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்து படுக்கை வசதி கிடைத்ததும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா தொற்றுளவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம். அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் கொரோனா வார்டில் நோயாளிகளை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுக்குள் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் எவ்வித தடையும் இன்றி திரளாக சென்று பார்ப்பதும், அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வருவதும் போவதுமாக இருந்தனர்.

இதனால் கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுபவதுடன் அவர்கள் மூலமாக சேலத்திலும் கொரோனா நோய்பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனிடையே நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் தாங்களாகவே நோயாளிகளுக்கான ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் செயலிலும் ஈடுபட்டனர்.

இது போன்ற அத்துமீறல்களால் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்களால் முறையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் ஆக்சிஜன் வீண் ஆகும் நிலையும் ஏற்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை முதல் கொரோனா வார்டுக்குள் யாரையும் அனுமதிக்காமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் வார்டு முன்பு திரண்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் முறையாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான தாங்கள் உடன் இருப்பதாகவும் அவர்கள் முறையாக சிகிச்சை அளித்தால் தாங்கள் ஏன் உடன் இருக்கப்போகிறோம் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனை அடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், நோயாளிகள் முறையாக கவனிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.

இதே போல் தமிழகத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதால் அவர்கள் மூலமாக நோய்ப்பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே சென்னை, சேலத்தை பின்பற்றி கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments