முழு ஊரடங்கு - வெறிச்சோடிய நகரங்கள் உலாவரும் இளைஞர்களுக்கு போலீஸ் குட்டு

0 15122
முழு ஊரடங்கு- வெறிச்சோடிய நகரங்கள் உலாவரும் இளைஞர்களுக்கு போலீஸ் குட்டு

கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ள நிலையில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

விதியை மீறி வெளியே சுற்றித்திரிவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருவதுடன், நூதன தண்டனைகளையும் போலீசார் விதித்துவருகின்றனர்.

காஞ்சிபுரம் : முழு ஊரடங்கு எதிரொலியால் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அத்தியாவசிய கடைகளான பால், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

எப்போதும் கணிசமான அளவு வாகனங்கள் செல்லக்கூடிய சென்னை பெங்களூர்- தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

நாமக்கல் : முழு ஊரடங்கை மீறி நாமக்கல் நகரின் முக்கிய சாலைகளில் ஏராளமானோர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்துவருகின்றனர்.

சில இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுள்ள போலீசார் வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தி, அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவருகின்றனர்.

நகரின் எல்லைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாத மக்கள் அலட்சியமாக வெளியில் சுற்றித்திரிகின்றனர்.

கோவை : தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக கோவையில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதனால் அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின.

மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் தடுப்புகள் அமைத்துள்ள போலீசார், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்களிடம் அபராதம் விதிக்கும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

திருச்சி : முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் 50 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையம் அமைத்துள்ள போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய காரணங்கள் இன்று வெளியில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளிடம் 200 ரூபாய் அபராதம் வசூலித்துவருகின்றனர். இதனால் திருச்சி ஜங்ஷன், தில்லை நகர், மேலப்புதூர் பாலக்கரை, உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

நாகை : முழு ஊரடங்கையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடி அமைத்துள்ள போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளால் கடற்கரை, கடைத்தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தஞ்சாவூர் : முழு ஊரடங்கையொட்டி தஞ்சாவூரில்  8 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள போலீசார், முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையில் செல்லும் எந்த வாகனத்தை போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்யாததால் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் இருந்தது. 

விழுப்புரம் : முழு ஊரடங்கால் விழுப்புரத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. அநாவசியமாக வாகனங்களில் சுற்றித்திரிவோரை தடுத்து நிறுத்தும் போலீசார் அவர்களை எச்சரிப்பதுடன், அபராதம் விதித்து வருகின்றனர்.

மாவட்ட முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றித்திருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த போலீசார், எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

முழு ஊரடங்கால் தேரடி வீதி, பெரிய தெரு, திருமஞ்சன கோபுரம் வீதி, பெரியார் சிலை, காந்தி சிலை, நகர மத்திய பேருந்து நிலையம், சன்னதி தெரு, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்துள்ள போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருவள்ளூர் : கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் ஆள்நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளித்தது.

தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரின், வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்புகின்றனர்.

நெல்லை : முழு ஊரடங்கையொட்டி நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இல்லாதால் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

பிரதான சாலைகளில் 20 க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்துள்ள போலீசார், தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித்திரிபவர்களை பிடித்து எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments