கோவிலில் கச்சேரி.. காலில் விழவைத்து கட்டப்பஞ்சாயத்து...! 3 பெரியவர்களுக்கு நேர்ந்த அவலம்

0 7402
கோவிலில் கச்சேரி.. காலில் விழவைத்து கட்டப்பஞ்சாயத்து...! 3 பெரியவர்களுக்கு நேர்ந்த அவலம்

விழுப்புரம் அருகே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி நோய்பரவலை ஏற்படுத்தும் விதமாக திருவிழா கச்சேரி நடத்திய சம்பவம் தொடர்பாக 3  முதியவர்களை காலில் விழ வைத்து தண்டனை வழங்கிய பஞ்சாயத்து நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வருத்தப்படாத வாலிபர்கள் நடத்திய கச்சேரியால் நிகழ்ந்த சாதித் தகராறு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் காலனி பகுதியில் ஊரடங்கை மீறி ஒரு பிரிவினர் கரகாட்டத்துடன் கோவில் திருவிழா நடத்தியதாக கூறப்படுகின்றது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வந்து, திருவிழா நடத்திய பகுதியினர் மீது நோய் பரவலுக்கு வழி வகுத்ததாக வழக்குப் பதிவு செய்து சென்றுள்ளனர்.

போலீசார் சென்ற பின்னர் அடங்காமல் காலனி பகுதி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், வாகனத்தில் இருந்தபடியே கச்சேரி செய்யும் இசைக்குழுவினரை அழைத்து வந்து இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இது தொடர்பாகவும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் இசைக்குழுவினரின் உபகரணங்களை பறிமுதல் செய்து சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இளைஞர்கள் செய்த தவறுக்கு தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் தங்கள் மீது போலீசில் அளித்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு இசைக்கருவிகளை திரும்ப கொடுக்க சொல்லுமாறு, திருவிழா நடத்திய பகுதி முதியவர்கள் வேண்டியுள்ளனர்.

அப்போது கிராமத்துப் பகுதியை சேர்ந்தவர்கள் கட்டபஞ்சாயத்து பேசி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுச்செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் 3 பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி தரையில் அமர்ந்திருந்த பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

இந்த கட்டப்பஞ்சாயத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழத்தொடங்கின. பஞ்சாயத்து செய்த கிராமப்பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்,சீத்தாராமன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லவிடாமல் அவர்களது உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டதோடு, நோய்பரவலை ஏற்படுத்தும் விதமாக திருவிழா நடத்திய காலனி பகுதியை சேர்ந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கிராமப்பகுதிகளில் சாதிய தீண்டாமையை உருவாக்கும் விதமாக கட்டப்பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே இந்த விவகாரத்தை முடிக்காமல் இழுத்தடித்த போலீசாரின் கவனக்குறைவால் தான் இந்த கட்டப்பஞ்சாயத்து சம்பவமே நிகழ்ந்தப்பட்டதாக காலனிபகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments